காரைக்கால், மாஹேயிலும் புதுச்சேரி கேபினட் கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்தப் பகுதிகளிலும் அமைச்சரவைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக யேனத்தில் இம்மாதம் 6ம் தேதி முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காரைக்கால், மாஹே ஆகிய பிராந்தியங்களிலும் அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், காரைக்கால் புறக்கணிக்கப்பட்டு
வருவதாகவும், அதை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளதையடுத்து புதுவை அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
திமுக சார்பில் ராமசந்திரன் முதல்வராக இருந்தபோது மட்டும் ஒரே ஒரு முறை காரைக்கால் பகுதியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு முன்பும், பின்பும் புதுச்சேரியைத் தவிர்த்து மற்ற பிராந்தியங்களில் அமைச்சரவைக் கூட்டம் நடந்ததே இல்லை என்பது குறுப்பிடத்தக்கது.
புதுச்சேரி-மாஹே ரயில் போக்குவரத்து:
இந் நிலையில் புதுச்சேரி-மாஹே இடையே ரயில் போக்குவரத்தை, வரும் 11ம் தேதி மத்திய அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைக்கிறார்.
இந்த ரயில் மங்களூரில் இருந்து புறப்பட்டு கண்ணனூர், மாஹே, கோழிக்கோடு, பாலக்காடு, ஈரோடு, சேலம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக புதுச்சேரி வந்து சேரும்.
அதே போல புதுச்சேரியில் இருந்தும் மங்களூருக்கு இந்த ரயில் இயக்கப்படும். இது வாரந்திர ரயிலாகும்.












Click it and Unblock the Notifications