தெலுங்கானா-மாணவர்கள் 'மகா கர்ஜனை' போராட்டம்
ஹைதராபாத்: ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி நாளை ஹைதராபாத்தில் மாணவர்கள் ' மகா கர்ஜனை' போராட்டம் நடத்துகின்றனர்.
இதற்காக தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் திரண்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று தெரிகிறது.
போராட்டத்தில் நக்சலைட்டுகளும் பங்கேற்கலாம் என்பதால் பெரும் வன்முறை வெடிக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து கர்ஜனை போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஆனால் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் திரண்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்பிய மாணவர்களும் பங்கேற்றனர்.
புத்தாண்டு இரவில் கலை நிகழ்ச்சி:
இந் நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தவி்ர்த்துவிட்டு தெலுங்கானாவை ஆதரிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வியாழக்கிழமை இரவு மாணவர்கள் நடத்தினர்.
உஸ்மானியா பல்கலைக்கழ மாணவர்களும் வாரங்கலில் உள்ள காகதியா பல்கலைக்கழக மாணவர்களும் தெலுங்கானா பகுதி நாட்டுப்புறக் கலைகள், பாடல்களைப் பாடி இந்த கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் தெலுங்கானாவை ஆதரிக்கும் பல்வேறு தரப்பினரும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் கர்ஜனை போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வரங்கல் மாவட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியினர் வன்முறையில் ஈடுபட்டனர். அரசு பஸ், 2 லாரிகளை தீ வைத்து எரித்தனர். இதில் பல பயணிகள் படுகாயமடைந்தனர்.
ராஜினாவை வாபஸ் பெற்றால்...
இதற்கிடையே அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த 80 பேரில் 10 அமைச்சர்கள் அதை வாபஸ் பெற்றுவிட்டனர். இதற்கு மாணவர்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தெலுங்கானாவுக்கு ஆதரவாக மந்திரிகள் ராஜினாமா செய்தது ஒரு நாடகம் என்பது நிரூபணமாகி விட்டது. இதனால்தான் அவர்கள் ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். வெளியில் அவர்களை நடமாட விட மாட்டோம் என அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதற்கிடையே ராஜினாமா வாபஸ் பெற்ற லட்சுமய்யா வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் லட்சுமய்யாவையும் தாக்க முயற்சி நடந்தது. போலீசார் விரைந்து வந்து அவரைக் காத்தனர்.
அதேபோல நல்கொண்டா, ஹங்கல் போன்ற ஊர்களிலும் அமைச்சர்களின் வீடுகளை தாக்க மாணவர்கள் முயன்றதால் பரபரப்பு நிலவுகிறது.
அமைச்சருக்கு காங்கிரஸ் நோட்டீஸ்:
இந் நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் முதல்வர் ரோசய்யாவுக்கு எதிராகப் பேசியதற்கு விளக்கம் கேட்டு ஆந்திர அமைச்சர் வெங்கட ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலுங்கானா பிரச்சனை தொடர்பாக தான் அளித்த ராஜிநாமா கடிதத்தை வாபஸ் பெற மறுத்து வரும் வெங்கட ரெட்டி, முதல்வர் ரோசய்யாவை தாக்கி வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
அதில், தெலங்கானா போராட்டத்தில் நக்ஸலைட்டுகள் ஊடுருவி உள்ளதாக ரோசய்யா கூறியது சரியல்ல. தனி தெலுங்கானா அமைவதற்கு எதிரான வகையில் மத்திய அரசுக்கு அவர் அறிக்கை தரக் கூடாது. மாநிலம் பிரிக்கப்படும் வரையிலாவது அவர் முழு ஆந்திரத்துக்கும் முதல்வர் போல செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications