சென்னை: தண்டவாளத்தில் விரிசல்-ரயில்கள் தாமதம்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில், ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் தென் மாவட்டங்களிலிருந்து இன்று காலை சென்னை வந்த ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
இன்று காலை 5.45 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மீனம்பாக்கம், திரிசூலம் இடையே வந்தபோது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
இதையடுத்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் டிரைவர் தகவல் கொடுத்தார். பின்னர் ரயில் போய் விட்டது.
புகாரைத் தொடர்ந்து தொழில்நுட்ப ஆய்வாளர்கள் வந்து தண்டவாளத்தைப் பரிசோதித்தபோது அதில் விரிசல் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் ரயில்கள் மிக மிக மெதுவாக செல்ல உத்தரவிடப்பட்டது. அதன்படி, பாண்டியனைத் தொடர்ந்து வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட அனைத்து ரயில்களும் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.
இதனால் தென் மாவட்ட ரெயில்கள் சிறிது நேரம் தாமதத்துடன் எழும்பூர் நிலையம் வந்து சேர்ந்தன. சரியான நேரத்தில் விரிசல் கண்டு பிடிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications