ரேஷனில் இலவச பொங்கல் பொருட்கள்- தொடர சிபிஎம் கோரிக்கை
சென்னை: பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை கடந்த ஆண்டு இலவசமாக கொடுத்தது போல இந்த ஆண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொங்கல் பண்டிகையை ஒட்டிப் பொதுவிநியோக முறையின் கீழ் வழங்குவதற்காகப் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 60 ஆயிரம் டன் பச்சரிசியைத் தமிழக அரசு வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பச்சரிசி தட்டுப்பாட்டைக் கருதி இந்த ஏற்பாட்டை மேற்கொள்வதாக அறிவித்த மாநில அரசின் உணவுத்துறைச் செயலாளர் கடந்த ஆண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட ரேஷன் கடைகளில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், திராட்சை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது இந்த ஆண்டு தொடராது என்றும் அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததை ஒட்டியே இந்த இலவச சர்க்கரைப் பொங்கலுக்கான பொருட்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது என்று இதற்கு அவர் ஒரு புதிய விளக்கமும் தந்துள்ளார்.
இந்த ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தை திங்கள் முதல்நாள் என்றுதான் மாநில அரசு நடைமுறைப்படுத்துகிறது. மேலும், கடுமையான விலைவாசி மக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிற நிலைமையில், இலவச சர்க்கரை பொங்கல் பொருட்கள் விநியோகத்தை இந்த ஆண்டு நிறுத்துவது என்கிற முடிவு விவேகமானதல்ல.
வெளிச்சந்தையில் வெல்லம் விலை உயர்வு பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஆண்டும் சர்க்கரைப் பொங்கல் பொருட்களை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கிட மாநில அரசு முன்வரவேண்டும்.
இதேபோன்று, ரேஷன் கடைகளில் மலிவுவிலையில் காய்கறி விற்பனை தொடர்பான நடவடிக்கையையும் பொங்கலோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து நடைமுறைப்படுத்துமாறும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications