கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகை-வைகோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் கேரள மக்களுக்கு பாதி்ப்பு ஏற்படுவதில்லை. புதிய அணையால் தமிழகத்திற்கு பயன் இல்லை. எனவே புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். முல்லை பெரியாறு அணைக்கு எந்த கேடும் ஏற்பட கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.
அதே போல் குமரி மாவட்டத்துக்கு நெய்யாறு தண்ணீர் வராததால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் இழந்துள்ளது. இந்த தண்ணீரும் கேரள வழியாக கடலில் தான் கலக்கிறது.
இந்த இரு அணை தண்ணீரும் தமிழகத்திற்கு கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் பொருளாதார முற்றுகை போராட்டம் நடத்துவோம். கேரள மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து பால், அரிசி, காய்கறி, மாடுகள், மணல் உள்பட ஏராளமான பொருட்கள் செல்கின்றன. இது போன்ற எந்த பொருட்களையும் கேரளாவுக்கு கொண்டு செல்ல விடாமல் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
இப்போது கூடன்குளம் அனுமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கேரளாவுக்கு கொண்டு செல்ல ஓப்பந்தம் செய்துள்ளனர். தமிழக அரிசி ஏராளமாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். கேரள மக்களும் நம் சகோதர, சகோதரிகளாக அன்பு பாராட்டுகிறோம். எனவே கேரள மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை முற்றுகை செய்யும் நடவடிக்கையில் இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை. அந்த போராட்டத்தை உடனடியாக நாங்கள் செய்வதில்லை.
வரும் 28ம் தேதி தேனி, சேலம், ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலங்கள் முன் ஆர்பாட்டம் செய்கிறோம். தேனி மாவட்டத்தில் நடக்கும் போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன். பிப்ரவரி 9ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார் வைகோ.
தானே வாதாடும் வைகோ:
இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்கு வழக்கு விசாரணை நாளை நீதிபதி தேவராஜ் முன்னிலையில் தொடங்குகிறது. இதில் வைகோ நேரில் ஆஜராகிறார். தனக்காக அவரே வாதாடுகிறார்.












Click it and Unblock the Notifications