40,000 ஓட்டு வித்தியாசத்தில் வெல்வேன்-தமிழ்க்குமரன்
பென்னாகரம்: 40,000 ஓட்டு வித்தியாசத்தில் பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று அத்தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் கூறியுள்ளார்.
பென்னாகரம் தொகுதியில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. கட்சித் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் அங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் இன்பசேகரன் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள் சுரத்தின்றி காணப்படுகின்றன.
பாமகவின் கோட்டையாக திகழ்ந்த தொகுதி பென்னாகரம். ஜி.கே.மணி இங்கு 2 முறை வென்றுள்ளார். கடந்த முறை நடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் ஜி.கே.மணி இங்கிருந்து வேறு தொகுதிக்கு மாற நேரிட்டது.
இந்த நிலையில் பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணன் மறைவால் அங்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாமகவினரும், திமுகவினரும் இப்போதே படு வேகமாக களப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்க்குமரன், தர்மபுரியில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பென்னாகரம் தொகுதி எனது தந்தை நின்று வென்ற தொகுதிய 1996 மற்றும் 2001 ஆகிய இரு முறை எனது தந்தை இங்கு வெற்றி பெற்றுள்ளார்.
இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தபோது, மலை கிராமங்களுக்கு ரேஷன் கடைகள், பள்ளிகளைத் தரம் உயர்த்துவது, மின்சார வசதி என மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
அதேபோல இத்தொகுதி மக்களுக்குப் பலன் அளிக்கும் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்தும் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
எனவே இத்தொகுதியில் எனது வெற்றி உறுதி. 40,000 ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றார் தமிழ்க்குமரன்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இடைத் தேர்தலைச் சந்திக்கும் தென் மாவட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 40,000 ஓட்டு வித்தியாசத்தில் வெல்வார்கள் என்று தேர்தலுக்கு முன்பே சொல்வது வழக்கம். அதே பாணியில் தமிழ்க்குமரனும் இப்போதே, 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications