பொன்சேகாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு?
கொழும்பு: அதிபர் தேர்தலில் தன்னை ஆதரிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக பொன்சேகா அலுவலகம் கூறியுள்ளது. ஆனால் இன்றுதான் முடிவெடுக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாக மாறியுள்ளன. தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெறும் நபரே வெற்றி பெற முடியும் என்ற நிலை.
இதையடுத்து தமிழர்களை ஐஸ் வைத்து வாக்குகளை அள்ளி விட ராஜபக்சேவும், பொன்சேகாவும் போட்டி போட்டு முயன்று கொண்டிருக்கின்றனர்.
இதுதொடர்பாக முக்கிய தமிழ்க் கட்சி கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற ராஜபக்சேவும், பொன்சேகாவும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த இருவரையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தைகளும் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சம்பந்தன் சந்தித்துப் பேசினார்.
அந்த சந்திப்பின்போது,
- அதி உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்க வேண்டும்.
- உரிய வகையில் மறு குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
- தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
- மீன்பிடித் தடையை முழுமையாக நீக்க வேண்டும்
- வர்த்தக, வாணிப தடைகளை நீக்க வேண்டும்.
- தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற வேண்டும்.
என்பது உள்ளிட்ட 10 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பொன்சேகாவிடம் சம்பந்தன் கொடுத்தார்.
இந்த நிலையில், நேற்று பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் வெளியிட்ட ஒரு தகவலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பொனசேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
ஆனால் தங்களது முடிவு இன்றுதான் எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் உள்ள தங்களது கட்சிக் கூட்டத்தி்ல் ஆலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.
மேலும், பொன்சேகாவை ஆதரித்து இதுவரை எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
முன்னதாக நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், 18 எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இவர்களில் சுயேச்சையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிவாஜி லிங்கமும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் ஆதரவு கூட்டமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது கடந்த அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தனர். இப்போதும் அதே மன நிலையில்தான் உள்ளனர்.
அதேசமயம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புலிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழர்கள் வாக்களித்தனர். ஆனால் தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த ராணுவத்திற்கு தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு ஆதரவு தர தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத்தில் 21 எம்.பிக்கள் உள்ளனர். அத்தனை பேரும் தமிழ் மக்கள் வாக்களித்து அனுப்பி வைத்தவர்கள். அனைவரும் புலிகளின் கோரிக்கைக்கேற்ப தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்கள்.
பல்வேறு கட்சிகளாக சிதறிக் கிடந்த தமிழ் அரசியல் தலைவர்களை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்ததும் புலிகள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications