தெலுங்கானா-டெல்லி கூட்டம் தோல்வி-நார்த் பிளாக் முற்றுகை

Subscribe to Oneindia Tamil

Telangana
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த எட்டு முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் வளாகத்தில் தெலுங்கானா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கூடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் தெலுங்கானா தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம், சிபிஐ, சிபிஎம், பாஜக, மஜ்லிஸ் இ இட்டாஹுல் முஸ்லிமீன் ஆகிய எட்டு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆனால், இதில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. கூட்டத்தின் முடிவில், தெலுங்கானா தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை அனைத்துத் தரப்பு மக்களும் அமைதி காத்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப உதவ வேண்டும் என்று ஒரு கூட்டறிக்கையை மட்டும் அனைத்து ஆந்திர கட்சிகளும் வெளியிட்டன.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் இறுதி முடிவுக்காக காத்திருப்போம் என்றார்.

பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி கூறுகையில், ஒன்றுபட்ட ஆந்திராவையே நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.

நார்த் பிளாக் முற்றுகை:

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் வளாகத்தில் தெலுங்கானா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கூடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

முன்னதாக இரு தரப்பையும் சமரசப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திட்டம் ஒன்றை கூட்டத்தில் முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த திட்டமும் முன் வைக்கப்படவில்லை.

தெலுங்கானா குறித்து ஆலோசனை கூற கமிட்டி ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இப்படிப்பட்ட கமிட்டிகள் காலம் கடத்தும் செயல், எனவே ஏற்க முடியாது என்று சந்திரசேகர ராவ் திட்டவட்டமாக கூறிவிட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

இந் நிலையில் இது இது அரசியல் பிரச்சனையாக மட்டுமின்றி, சட்டரீதியான பிரச்சனையாகவும் இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டிடம் கருத்து கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் சிக்கலான முக்கிய பிரச்சனைகள் எழும்போது, சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு 143வது சட்ட விதியின் கீழ்கருத்துக்கேட்பது வழக்கம். அந்த சட்டப்பிரிவை தெலுங்கானா விவகாரத்துக்கும் பயன்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தான் ஜனாதிபதி மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு கருதுகிறது.

பிரதமருடன் ரோசய்யா ஆலோசனை:

முன்னதாக முதல்வர் ரோசய்யா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதேபோல சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

பிரதமரை ரோசய்யா சந்தித்தபோது மேற்கண்ட அமைச்சர்களும், ப.சிதம்பரமும் உடன் இருந்தனர்.

பிரதமர் வீட்டில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் இருந்தார் ரோசய்யா. எனவே தெலுங்கானா விவகாரம், இதனால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பரதனுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

முன்னதாக டெல்லி வந்துள்ள தெலுங்கானா தலைவர் சந்திரசேகர ராவ், சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தெலுங்கானாவுக்காக ஆதரவும் கோரினார்.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தேசியத் தலைவர்களையும் தான் சந்திக்கவுள்ளதாக ராவ் கூறியுள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் தான் திரட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அல்லல்படும் அப்பாவி மக்கள்

இப்படி தலைவர்கள் ஒருபக்கம் ஆலோசனைகள், ஆதரவுகள் என அலைந்து திரிந்து கொண்டிருக்க அப்பாவி ஆந்திர பிரதேச மாநில மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இரு பிரிவினரும் மாறி மாறி நடத்தி வரும் பந்த் உள்ளிட்ட போராட்டங்களால் ஒட்டுமொத்த ஆந்திராவும் முடங்கிப் போயுள்ளது.

சாலைப் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு போக்குவரத்துத் துறை, வர்த்தகத் துறை உள்ளிட்டவை நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. ஒரு இடத்திலிருந்து புறப்பட்டால் இன்னொரு இடத்திற்குப் போய்ச் சேருவதற்குள் மக்களுக்குப் போதும் போதும் என்றாகி விடுகிறது.

நேற்று ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று கோரி கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் பந்த் நடந்ததால் அப்பகுதிகள் முடங்கிப் போய்க் கிடந்தன. இன்று தெலுங்கானா பகுதியில், பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இரு பகுதி போராட்டக் குழுக்களும் அறிவித்துள்ளதால் இன்றும் ஆந்திரா செயல்படாத நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+