தெலுங்கானா: வருமானத்தை இழக்கும் ஆந்திர பிபிஓ நிறுவனங்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டங்களால் ஆந்திர பிபிஓ நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. நஷ்டத்தை சந்திக்க முடியாத பல நிறுவனங்களும் தங்கள் ஜாகையை வேறு நகரங்களுக்கு மாற்றலாமா என யோசித்து வருகின்றன.
குறிப்பாக ஹைதராபாத் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள ஏராளமான 'மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன்' பணிகளை மேற்கொண்டு வரும் பிபிஓ மையங்கள் சிக்கலில் மாட்டியுள்ள தெரிகிறது.
இந்திய மருத்துவ ஆவணங்கள் சங்கத்தின் (ஐஏஎம்ஆர்) செய்தித்தொடர்பாளர் கோபாலகிருஷ்ணா இதுகுறித்து கூறுகையில், 'ஹைதராபாத்தில் மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் பணிகளை மேற்கொள்ளும் பிபிஓக்கள் வழக்கமாக ஒருநாளைக்கு 20 மணிநேரம் இயங்கும்.
ஆனால், தற்போது 8 முதல் 10 மணி நேரம் மட்டுமே இவர்களால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க முடிகிறது. இதனால் வருவாயில் பெரும் நஷ்டம் ஏற்படும்.
எத்தனை மணிநேரம் சேவை வழங்குகிறோம், எத்தனை அழைப்புகளுக்கு பதில் சொல்லியிருக்கிறோம், எத்தனை வாடிக்கையாளரை கையாண்டிருக்கிறோம் என்பதன் அடிப்படையில், ஒவ்வொரு நிமிடங்களையும் கணக்கிட்டுத் தான் பிபிஓ நிறுவனங்கள் வருமானத்தை ஈட்டும்.
ஆனால், தற்போது வேலை நேரம் வெகுவாக குறைந்துவிட்டதால் வருவாயில் பெரிய துண்டு விழுவது நிச்சயம். பந்த் நடக்கும் போதெல்லாம் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவது குறைந்துவிடுகிறது. இதுபோல அடிக்கடி நடப்பதால் வழக்கமான பணிகளும் தேங்கிவிடுகின்றன.
இதற்கு பயந்து சுமார் 200 நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்யும் நடவடிக்கையில் இறங்கிவிட்டன. பல நிறுவனங்கள் வேறு நகரங்களுக்கு சென்றுவிடலாமா என சிந்திக்கத் தொடங்கியுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை எல்லாம் நாங்கள் பேசி சமாதானப்படுத்தி வருகிறோம். விரைவில் நிலைமை சீராகிவிடும் எனக் கூறிவருகிறோம். நிலைமை சீராகும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அவர்கள் கேட்கும் போது தான் பதில் சொல்ல சிரமமாக இருக்கிறது' என்றார்.
விஷன் 2கே பிளஸ் என்று பிபிஓ நிறுவனத்தின் நிர்வாகி சௌடாமினி கூறுகையில், 'மருத்துவத் துறையைப் பொறுத்தவரை 24 மணிநேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் பணியாற்ற வேண்டியிருக்கும்.
மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் தந்தாக வேண்டும். பந்த், ஸ்டிரைக், பஸ் ஓடவில்லை என அவர்களிடம் காரணம் கூறிக்கொண்டிருந்தால் ஒத்துக்கொள்வார்களா?' என்கிறார்.
பந்த் தீவிரமடையும் போதெல்லாம் ஹைதராபாத், வாராங்கல் போன்ற பகுதிகளில் உள்ள பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்துசேருவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய நிறைய செலவாகிறது. நேரமும் விரயமாகிறது. இவை தங்களின் வருமானத்தில் பெரும் பங்கை குறைத்துவிடும் என பலரும் குறைகூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications