கூட்டணி அரசியல் மிக சவாலானது: மன்மோகன் சிங்
டெல்லி: ஆட்சியை சுமூகமாக நடத்த கூட்டணி அரசியல் பெரும் சவாலாக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
டெல்லியில் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பாகிஸ்தான் உள்பட காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 50 சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் உள்பட அனைத்து மாநில சபாநாயகர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,
இந்தியாவில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் புதிது புதிதாக நிறைய அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம், கூட்டணி அரசியல் சித்தாந்தம் வலுப்பெற்று வருகிறது.
மேலும், பல்வேறு தரப்பட்ட வாக்காளர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கும், அவர்களது குரல்கள் அரசியல்ரீதியாக வலுப்பெறுவதற்கும் இந்தக் கூட்டணி அரசியல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
சிறிய கட்சிகளின் வருகையால் அரசை நிர்வகிப்பது சவாலாக உள்ளது. இருப்பினும், இத்தகைய கட்சிகளால் நாடாளுமன்ற ஜனநாயகம் மேலும் வலுப்பெற்று வருகிறது என்பதை மறுக்க முடியாது.
சிறிய கட்சிகளின் அணுகுமுறைகள் குறுகிய நோக்கமுடையதாக இருந்தாலும், கூட்டணி அரசியலில் அவை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உலகம் முழுவதும் வர்த்தகம் மற்றும் இதர துறைகளைப் போலவே, அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். தேர்தலில் இத்தகைய இளையவர்கள் தான் அதிகமாக வாக்களிக்கின்றனர். இவர்களது எதிர்பார்ப்புகளை நாம் நிறைவேற்றியாக வேண்டும்.
இதேபோல, அரசியலிலும், நாட்டின் வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல்கள் மூலம் பயங்கரவாதிகள் விடுக்கும் சவால்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இத்தகைய தொல்லையைச் சமாளிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத சித்தாந்தங்கள் வளர்ந்து வருவது நாகரிக சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் ஜனநாயகத்துக்கும் பெரும் சவாலாக விளங்குகின்றன. இத்தகைய சக்திகளுக்கு நாம் எந்தவிதத்திலும் இடம் அளித்துவிடக் கூடாது என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications