ஸ்ரீரங்கம் ஜீயர் மடம்: பக்தர்களை அரிவாளை காட்டி விரட்டியதாக புகார்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் பலகாரி ஜீயர் மடத்தில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களை அரிவாளை காட்டி மிரட்டி வெளியே அனுப்பியதாக கூறப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் ஸ்ரீபலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக மடத்தின் கதவுகள் பூட்டி கிடந்தது.
மடத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஸ்ரீபலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்து சிஷ்யர்கள் சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரும் மடத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 21ம் தேதி கதவு திறக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்ரீநிவாசபெருமாளை, கோவிந்தராமானுஜதாசா மற்றும் அவரது சிஷ்யர்களும் தரிசிக்க சென்றனர்.
அப்போது மடத்தில் உள்ள சிலர் தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி வெளியே அனுப்பியதாகவும் அரிவாளால் மிரட்டி வெட்ட வந்ததாகவும் கோவிந்த ராமானுஜதாசா ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் மடத்தின் நிர்வாகத்தினர் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினர். புகார் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications