ஆளுநர் உரை வருத்தம் அளிக்கிறது-ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: மக்களை வாட்டும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சட்டப் பேரவையில் வாசிக்கப்பட்ட 2010ம் ஆண்டு ஆளுநர் உரை கடந்த நான்காண்டு உரைகளின் மறுபதிப்பாக அமைந்துள்ளதே தவிர, தொலைநோக்குத் திட்டங்கள் கொண்ட உரையாக அமையவில்லை.

கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.2,000 அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், லாரி வாடகை மற்றும் கட்டுமான ஊக்கத் தொகையுடன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1,550யை மீண்டும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பண்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போதைய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள சூழ்நிலையில், 2,11,356 ஏக்கர் நிலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 48 லட்சம் ஏக்கர் நிலம் குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

காவிரி, பாலாறு, பொன்னையாறு பிரச்சனைகள் குறித்து ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடாதது, இந்தப் பிரச்சனைகளில் இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று இந்த அரசு நினைத்துவிட்டதோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவிப்போடு தான் இருக்கிறதே தவிர, பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

62 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், வெறும் 3.5 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, கிருஸ்துவ மதத்தைச் சார்ந்த ஆதி திராவிடர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கான சலுகைகள் வழங்குவது, கச்சத்தீவு மீட்பு ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையில் தவறாமல் இடம் பெறுகின்றனவே ஒழிய, அவைகள் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்கான செயல் திட்டம் இந்த ஆளுநர் உரையில் இல்லை.

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கடுமையான மின்சார பற்றாக்குறை தொடர்ந்து நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இதன் விளைவாக தொழில் உற்பத்தியும், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

'மலிவு விலையில் மளிகைப் பொருள்" என்ற திட்டத்தின் கீழ் ரூபாய் 50க்கு 10 மளிகைப் பொருட்கள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன என்பது தான் உண்மை நிலை.

மக்களை வாட்டிக் கொண்டு இருக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+