மதுரையில் 'ஏடிஎம்' மையங்கள் திடீர் செயலிழப்பு
மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்ட சில வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விஸ்வநாதபுரம், புதூர், அம்பேத்கர் சாலை, ஆவின் ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் உள்ள வெவ்வேறு தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளன.
மாதத்தின் முதல் வாரத்தில் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருப்பது வாடிக்கையாளருக்கு கடும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத சம்பளக்காரர்கள், பென்ஷனை எதிர்பார்த்துள்ள முதியோர் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மதுரை ரயில்வே ஜங்ஷனில் உள்ள ஏடிஎம் செயலிழந்ததைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் குறிப்பிட்ட பல ஏடிஎம் மையங்கள் செயலிழந்து போனதாக கூறப்படுகிறது.
அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும், எந்த வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் எடுக்கலாம் என்று இருந்த போது இந்த மைங்களில் வரிசை சற்று குறைவாக இருந்தது. தற்போது மாற்று வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவசமாக சேவைகளை பெறலாம் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதனால் குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பல ஏடிஎம் மையங்கள் செயலிழந்து கிடப்பதால் குறிப்பிட்ட இடங்களில் மேலும் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஏடிஎம் மையங்களில் பணத்தை போடும் சேவைக்காக வங்கிகள் தனியார் நிறுவனம் ஒன்றுடன் அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்தம் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அவுட்சோர்சிங் நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நிறுவனத்துடன் பல வங்கிகளும் ஒப்பந்தம் செய்துள்ளதால் சம்பந்தப்பட்ட ஏடிஎம்கள் அனைத்திலும் பணம் போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிரச்னை என்னவென்பதை ஆராய்ந்து விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஏடிஎம்கள் வழக்கம் போல இயக்கப்படும் என புகார் கூறும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி மேலாளர்கள் சமாதானம் சொல்லி அனுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications