டெட்ராய்ட் சதி: அதிகாரிகளை வறுத்தெடுத்த ஒபாமா!

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் பயங்கர தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வெடி மருந்துகளுடன் நுழைந்த தீவிரவாதி பயணிகளின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்.
இவ்விவகாரம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுமுறைக்காக ஹவாய் சென்றிருந்த அதிபர் ஒபாமா இதுகுறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இந்த சதி திட்டத்துக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் காரணம் என்றும், விமானத்துக்குள் வெடி மருந்தை தடையின்றி கொண்டு செல்லும் அளவுக்கு பாதுகாப்பு நடைமுறையில் எப்படி ஓட்டை விழுந்தது என்பது குறித்தும் ஒபாமா சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பான ஆலோசனை வெள்ளை மாளிகையில் செவ்வாய்கிழமை நடந்தது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் அமெரிக்க புலனாய்வு, பாதுகாப்பு மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மிகவும் கோபத்துடன் பேசிய ஒபாமா அதிகாரிகளை விளாசித் தள்ளிவிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
'சர்வதேச நாடுகளும் பிரமிக்கும் வகையில் கட்டுக்கோப்பான இவ்வளவு பெரிய பாதுகாப்பு, புலனாய்வு, தொழில்நுட்ப வசதிகளை கொண்டு நிர்வாகம் செய்து வருகிறோம்.
ஆனால், இந்த தீவிரவாத சதி திட்டத்தை விமானத்தில் இருந்த சாதாரண தனி மனிதர்கள் தான் கண்டுபிடித்து முறியடித்திருக்கிறார்கள். அப்புறம் எதற்கு நாமெல்லாம்?.
இந்த சதி திட்டம் குறித்து நம்மிடம் முன்னதாகவே உளவு தகவல் இல்லை என்றாலும் கூட ஒப்புக்கொள்ளலாம். ஆனால், நம்மிடம் புலனாய்வுத் தகவல் இருந்துள்ளது.
ஆனாலும் அதை முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், துறைகளுக்கு தெரிவித்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தீவிரவாதிகளை சுற்றிவளைக்க தவறிவிட்டோம்.
இந்தத் தோல்வியை என்னால், ஜீரணிக்க முடியவில்லை. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த மெத்தனம் ஒரு மிகப் பெரிய பேரழிவில் போய் முடிந்திருக்கும்.
வெடிமருந்துடன் ஒருவன் விமானத்தில் ஏறுகிறான் என்றால், நம்முடைய ஒட்டுமொத்த அமைப்பும் தோற்றுப்போய் விட்டதாகவே கருதமுடிகிறது என அதிகாரிகளிடம் ஒபாமா பொரிந்து தள்ளிவிட்டதாக செய்திகள் வெளியாகின்றன.












Click it and Unblock the Notifications