ஏர் ஹோஸ்டசிடம் கால்பந்து வீரர்கள் சில்மிஷம்
மும்பை: விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செயததாக கோவாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. இதனால் கொல்கத்தா சென்ற விமானம் நடுவழியில் மும்பையில் தரையிறக்கப்பட்டது.
கோவாவை சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் கால்பந்து அணி கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தது.
இதற்காக கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர் உள்பட 23 பேர் கோவாவில் இருந்து ஸ்பைஸ் ஜெட்' தனியார் விமானத்தில் பயணம் செய்தனர். அப்போது விமான பணிப்பெண் மற்றும் சகப் பயணிகளிடம் கால்பந்து வீரர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி விமானியிடம் பணிப்பெண் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. கால்பந்து வீரர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கால்பந்து வீரர்கள் 23 பேரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பணிப்பெண் அளித்த மானபங்க புகார் தொடர்பாக 3 வீரர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆனால், கால்பந்து வீரர்கள் தங்கள் மீதான் குற்றச்சாட்டை மறுத்தனர். அணி வீரர் ஒருவரின் கை தவறுதலாக விமான பணிப்பெண் மீது பட்டு விட்டதாகவும், அதற்காக அந்த வீரர் மன்னிப்பு கேட்டதாகவும், அதை அந்த பணிப்பெண் ஏற்றுக்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்துக்கு பிறகு விமான ஊழியர் மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் பிரச்னை ஏற்பட்டதாகவும், ஒருவர் செய்த தவறுக்கு அனைத்து வீரர்களையும் தரையிறக்கியதால் விமான நிறுவனம் மீது வழக்கு தொடர போவதாகவும் கால்பந்து அணியினர் அறிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications