மாணவனின் குடுமியை வெட்டிய பிரின்சிபால்-வழக்கு
மும்பை: பள்ளி மாணவனின் குடுமியை கத்தரித்த தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பை புறநகர் அந்தேரியில் உள்ள செயின்ட் ஜூட்ஸ் பள்ளியின் தலைமையாசிரியர் ஃபிரான்க் ஃபெர்னாண்டஸ். இதே பள்ளியில் பிரவேஷ் என்ற 14 வயது சிறுவன் 8ம் வகுப்பில் படித்து வருகிறான்.
பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பிரவேஷ் சம்பிரதாய முறைப்படி தலையில் குடுமி வைத்திருந்தார். பள்ளி விதிமுறைகளின் படி எல்லோரும் ஒரே மாதிரயான கிராப்புடன் தான் வரவேண்டும் என்பதால், குடுமியை எடுக்கமாறு பர்வேஷிடம் தலைமை ஆசிரியர் பலமுறை கூறியதாக தெரிகிறது.
ஆனால் பிரவேஷ் தொடர்ந்து குடுமியுடன் பள்ளிக்கு வந்ததால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், இன்று காலை பிரவேஷின் குடுமியை வெட்டி எறிந்துள்ளார்.
இதையடுத்து பிரவேஷின் பெற்றோர் தங்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் நடந்துகொண்டதாக போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் தலைமை ஆசிரியருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியதாக குற்றப்பிரிவு 295ஏ மற்றும் காயப்படுத்தியதாக பிரிவு 323ன் கீழ் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்வதற்கு முன்பாக தலைமை ஆசிரியருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications