பிரபாகரனின் துப்பாக்கி, ஆயுதங்கள் பறிமுதல்-இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நவீன கைத்துப்பாக்கி, கவச அங்கி உள்ளிட்ட ஆயுதங்களை மீட்டுள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடான போரில் அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரனை முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சுட்டுக்கொன்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
இந்த போரில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்டதையடுத்து இலங்கையின் வட கிழக்கே உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் அகதிகளாகவும், கைதிகளாகவும் சிறைபிடித்தது இலங்கை ராணுவம்.
தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழர்களை படிப்படியாக விடுவித்து வருகிறது. இதற்கிடையே, முல்லைத் தீவு பகுதிகளில் விடுதலைப் புலிகளால் தற்காப்புக்காக பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை இலங்கை ராணுவம் மற்றும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில், முல்லைத்தீவில் உள்ள வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பூமிக்கடியில் 15 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆயுதங்களை தோண்டி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியும், கவச உடையும் இருந்ததகாக இலங்கை ராணுவம் கூறுகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த கைத்துப்பாக்கி ராக்கெட் லாஞ்சர் பொருத்தப்பட்ட எம்.16 ரகத்தைச் சேர்ந்த சக்தி வாய்ந்த நவீன துப்பாக்கி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ரூ.11/2 கோடி மதிப்புள்ள 250 குதிரை திறன் கொண்ட படகுகளுக்கு பொருத்தப்படும் வெளியிணைப்பு என்ஜின்கள், கண்ணி வெடிகள், மிதி வெடிகள், 2 ஆயிரம் கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துகள், தற்கொலை தாக்குதலுக்கான 125 அங்கிகள், 50 சிறு ரக பீரங்கி குண்டுகள், விமானங்களை தாக்கும் 25 ராட்சத துப்பாக்கிகள் ஆகியவையும் பூமியில் புதைக்கப்பட்டிருந்ததாக வவுனியாவின் மூத்த டி.ஐ.ஜி. நிமால் லியுகே வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications