கருப்பு சட்டையில் அதிமுக: மதிமுகவுடன் வெளிநடப்பு

பின்னர் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அந்த சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் தற்போதைய சட்டசபை வளாகத்தில் இன்று கடைசிக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் வந்தனர்.
காவியி்ல் ஓ.பன்னீர்செல்வம்:
அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்திருந்ததால் காவி வேட்டி, கருப்பு சட்டையில் வந்தார். அவரை பார்த்த ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் சிலர் "சாமியே சரணம் ஐயப்பா' என்று கூற அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது. பன்னீரும் சிரிந்துக் கொண்டே அமர்ந்தார்.
ஆளும் கட்சி வரிசையில் எஸ்.வி.சேகர்:
ஆனால், அதிருப்தி அதிமுக எம்எல்ஏவான எஸ்.வி.சேகர் இம்முறை எக்கட்சியும் சாராத உறுப்பினராக அறிவிக்கப்பட்டு ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்தார்.
பர்னாலா 9.34 மணிக்கு சபைக்கு வந்தார். இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் பர்னாலா உரையாற்ற தயாரானார்.
அப்போது அதிமுக சட்டசபை துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு கவர்னர் உரையை புறக்கணிப்பதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்களுடன் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுநர் தனது உரை வாசித்தார்.
வெளிநடப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், திமுக அரசு முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்கவில்லை, இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத்தரும் கடைமையிலிருந்து தவறி விட்டது. விலைவாசி உயர்வை தடுக்கவில்லை, மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை தடுக்கவில்லை, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று இந்த அரசு ஊழலில் திளைக்கிறது.
கொலை, கொள்ளை, களவு என்று சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. எனவே தான் கவர்னரின் இந்த உரையை நாங்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.
ஜெயலலிதா வரவில்லை:
இன்றைய கூட்டத்துக்கு எதிர்க் கட்சித் தலைவியான ஜெயலலிதா வழக்கம்போல் வரவில்லை. எம்பி கனிமொழி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் மாடத்தில் அமர்ந்து சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்தனர்.
கவர்னரின் ஆங்கில உரையை வாசித்து முடித்தபின் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் தமிழில் வாசித்தார். ஆளுநர் உரைக்குப் பின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நாளை மீண்டும் கூடு்ம்.
இன்று தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடரில் 7 புதிய எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அத்தனை பேரும் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் வென்ற திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவர்.
11ம் தேதி வரை கூட்டத் தொடர்:
இந்த கூட்டத் தொடர் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடைசி தினத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்து பேசுவார்.
கோட்டையில் கடைசிக் கூட்டத் தொடர்...
வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய சட்டசபை வளாகத்தில்தான் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புனித ஜார்ஜ் கோட்டைக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் முக்கியமான ஒரு ஒற்றுமை உள்ளது.
கடந்த 1957ல் இருந்து கோட்டையில் உள்ள தற்போதைய சட்டசபை கட்டிடத்தில்தான் பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இடையில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் மட்டும் ஊட்டியில் உள்ள தமிழகம் எனப்படும் அரண்மூர் அரண்மனையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது.
கடந்த 1957ம் ஆண்டு கோட்டை வளாகத்தில் சட்டசபை செயல்படத் தொடங்கியபோது முதல் தற்போது வரை இந்த சட்டசபைக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதி மட்டுமே.












Click it and Unblock the Notifications