ஏமன் யுஎஸ் தூதரகம் மீண்டும் திறப்பு
சானா: ஏமன் நாட்டில் கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் அல் கொய்தாவினரின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏமன் நாட்டின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இடங்களில் அல் கொய்தாவினர் தங்களது முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இங்கு செலவு குறைவு என்பதால் உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபி மொழி கற்பதற்காக வருகின்றனர். ஆனால் அல் கொய்தா தொடர்புகளுக்காகவே பலரும் வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் பிடிபட்ட தீவிரவாதி அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவன் என அமெரிக்க புலனாய்வுத் துறை வலுவாக சந்தேகிக்கிறது. குறிப்பாக ஏமனில் இருந்துதான் சதிதிட்டங்கள் தீட்டப்பட்டதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.
கடந்த 31ம் தேதி ஏமனில் உள்ள அமெரிக்கர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுப்பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து ஏமனில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா கடந்த 4ம் தேதி மூடிவிட்டது. இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்கும் வகையில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என ஏமன் உள்துறை அமைச்சகம் உறுதியளித்தது.
இதையடுத்து தூதரக அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் அலுவலகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications