குஜராத்தின் பிராண்ட் அம்பாசடராக அமிதாப் விருப்பம்!

இதனால் குஜராத் மாநில பாஜக அரசு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது. அமிதாப் பச்சன் நடித்துள்ள சூப்பர் ஹிட் படமான பா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்காக காந்தி நகரில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பும் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமிதாப் பச்சன் பேசுகையில், குஜராத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்து வருகின்றன. அவற்றை பிற மாநிலங்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். குஜராத் மாநிலத்திற்காக குரல் கொடுக்கவும், அதன் சுற்றுலாவை மேம்படுத்தவும் நான் பிராண்ட் அம்பாசடராக செயல்பட தயாராக இருக்கிறேன் என்றார் அமிதாப் பச்சன்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உங்கள் நண்பர் அமர்சிங் விலகி விட்டாரே என்று கேட்டபோது, அதுகுறித்து எனக்குத் தெரியாது என்றார் அமிதாப்.
முன்னதாக, முதல்வர் நரேந்திர மோடிக்கு தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் எழுதிய மதுஷாலா என்ற நூலைப் பரிசாக அளித்தார் அமிதாப் பச்சன்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பச்சன் பேசுகையில், பா படத்தை புரமோட் செய்வதற்காகவே நான் குஜராத் வந்தேன். இந்தப் படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு அளிக்கும் என நம்புகிறேன் என்றார்.
பிராண்ட் அம்பாசடராக செயல்பட விரும்புவதாக அமிதாப் கூறியதற்கு மோடி நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்திய சமூகத்தில் இந்திப் படங்களுக்கு பெரும் தாக்கம் உள்ளது. அந்த வகையில் அமிதாப் பச்சன் ஒரு மாபெரும் கதாநாயகன் ஆவார். நானே கூட பலமுறை அமிதாப் பச்சனின் படங்களை விரும்பி்ப் பார்த்திருக்கிறேன் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அமிதாப்பிடம், அரசியலில் பிக் பி மோடி என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, பலத்த சிரிப்புடன், என்னை மோடியுடன் ஒப்பிட முடியாது. அவரைப் பற்றி நான் என்ன சொல்வது.
முதல்வராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பட்டும் படாமலும் நைசாக நழுவிக் கொண்டார் அமிதாப்.
மகாராஷ்டிராவின் பிராண்ட் அம்பாசடராக இருக்காமல், குஜராத் மீது பாசத்தைப் பொழிவதா என்று கூறி அமிதாப்பை விமர்சித்து, நாளை சிவசேனாவின் சாம்னாவில் கண்டிப்பாக ஒரு சாட்டையடி தலையங்கம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications