பின் லேடன் இளைய மகன் சிரியாவுக்கு ஓட்டம்
ரியாத்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின் லேடனின் இளைய மகன் ஈரானிலிருந்து வெளியேறி சிரியாவுக்குப் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் அவர் சிரியாவுக்குப் போனதாகவும், தற்போது டமாஸ்கஸ் நகரில் அவர் தங்கியுள்ளதாகவும் சவூதி அரசுக்குச் சொந்தமான அஷார்க் அல் அவ்சாத் என்ற செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது பெயர் பக்ரு பின் லேடன். இவர் ஈரானில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கிருந்து வெளியேற விரும்பி ஈரான் அரசிடம் அனுமதி கோரியிருந்தார். அரசும் அனுமதி தரவே தற்போது சிரியாவுக்குப் போய் விட்டார்.
இந்தத் தகவலை பின்லேடனின் இன்னொரு மகனான ஒமர் பின்லேடன் கூறியதாக இந்த செய்தித்தாள் கூறியுள்ளது.
ஏற்கனவே டமாஸ்கஸ் நகரில் பக்ருவின் தாயாரான நவ்ஜா அல் கானம் வசித்து வருகிறார். இவர் பின்லேடனின் மனைவியர்களுல் ஒருவர், சிரியாவைச் சேர்ந்தவர்.
டிசம்பர் 25ம் தேதி தனது தாயாருடன் இணைந்தார் பக்ரு என்று அச்செய்தி தெரிவிக்கிறது. பக்ருவுடன் மீண்டும் இணைந்ததைத் தொடர்ந்து அவரது தாயார் கண்ணீர்ப் பெருக்குடன் மகிழ்ச்சி தெரிவித்தார் என்று ஒமர் கூறியுள்ளார்.
பிரிந்து போய்க் கிடக்கும் பின் லேடன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் ஒன்று சேர முயற்சித்து வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications