பாக். ராணுவத்தை விட்டு ஓடி வந்தேன்-ராணா தகவல்

அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ராணா, ஜாமீன் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தான் பாகிஸ்தான் ராணுவத்தில் முன்பு பணியாற்றியதாகவம், பின்னர் அதிலிருந்து விலகி விட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது தனக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. எனவே தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். மேலும், நான் வெளிநாட்டுக்குத் தப்பிப் போகவும் மாட்டேன் என அவர் கோரியுள்ளார்.
சிகோகா கோர்ட்டில் நீதிபதி மாத்யூ கென்னலி முன்பு ராணாவின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இவ்வாறு தெரிவித்தார் ராணா. ஏற்கனவே ராணாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராணா தனது மனுவில், நான் நீண்ட காலத்திற்கு முன்பே பாகிஸ்தான் ராணுவத்தை விட்டு விலகி விட்டேன். மீண்டும் நான் பாகிஸ்தான் செல்ல முடியாது என்பதே உண்மை. எனவே நான் பாகிஸ்தானுக்கு தப்பிப் போவேன் என்பதற்கான வாய்ப்புகளே இல்லை. எனவே எனது உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றார்.
இருப்பினும் ராணாவின் கோரிக்கை மீதான முடிவை நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார். ராணா மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டுப் பதிவாகியிருப்பதால், ஜாமீன் மனு மீதான முடிவை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
இதற்கிடையே, மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான அனைத்துத் திட்டங்களும் ராணாவுக்கு முன்பே தெரியும். எனவே அவர் நிச்சயம் சிறையில்தான் கழித்தாக வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எப்.பி.ஐ தாக்கல் செய்துள்ள மனுவில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லியும், ராணாவும், மும்பைத் தாக்குதல் தொடர்பான சதித் திட்டங்களை முன்பே அறிந்திருந்தனர்.
மேலும் மும்பைத் தாக்குதலை இவர்கள் இருவரும் பாராட்டியதோடு, அதை செய்த லஷ்கர் இ தொய்பா அமைப்பையும் வாயார பாராட்டியுள்ளனர் என்று எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications