தனி தெலுங்கானா கோரி வாலிபர் தற்கொலை
ஹைதராபாத்: தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. தெலுங்கானா அதரவு மற்றும் எதிர்ப்பு குழுவினரை அழைத்து மத்திய உள்துறை மந்திரி சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரத தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இருதரப்பினரும் தங்கள் நிலையில் பிடிவாதமாக உள்ளதால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டங்களும் தொடர்ந்து நடந்துவருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பூமா ரெட்டி (24), நேற்று தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு ஆதரவாக தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத்தில் கம்ப்யூட்டர் படித்து வந்த இவர், எர்ரகட்டா பகுதியில் தங்கியிருந்தார். அறைக்குள் மின்விசிறியில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில்,
'தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்காக நான் என் உயிரை தியாகம் செய்கிறேன். தெலுங்கானா மாநிலத்தை மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல் அமைக்க வேண்டும்.
இல்லை என்றால் என்னைப்போல் மேலும் பல மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள்' என எழுதப்பட்டிருந்தது.
ஹைதராபாத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்த பூமா ரெட்டி உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பூமா ரெட்டி தற்கொலைக்கு அனுதாபம் தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications