சீர்காழி: அரசு பஸ்கள் மோதி 3 பேர் பலி-25 பேர் காயம்
பொறையார்: சீர்காழி அருகே அரசு விரைவுப் பேருந்துகள் மோதியதில் மூன்று பேர் பலியாயினர். 25 பயணிகள் காயமடைந்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே இன்று அதிகாலை 3.45 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சீர்காழி அருகே நெடுஞ்சாலையில் அரசு விரைவுப் பேருந்து ஒன்று டயர் பஞ்சர் ஆனதால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர் கீழே இறங்கி டயரை மாற்றிக்கொண்டிருந்தார்.
பஸ் கண்டக்டர் மற்றும் 40 பயணிகள் பேருந்தில் இருந்தனர். அப்போது வேலூரில் இருந்து மன்னார்குடி சென்ற அரசு பஸ் வேகமாக வந்து நின்றுகொண்டிருந்த பஸ் மீது மோதியது.
இதில் நின்றுகொண்டிருந்த பஸ்சின் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். 17 வயது சிறுவன் மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பஸ்சில் இருந்த 25 பேர் காயமடைந்தனர். டயரை மாற்றிக்கொண்டிருந்த டிரைவரின் கால் முறிந்தது. விபத்து ஏற்பட்டவுடன் மன்னார்குடி பேருந்தின் டிரைவர் தப்பிஒடிவிட்டார்.












Click it and Unblock the Notifications