தாவூத்-பாக். உறவு: ரொம்ப லேட்டாய் அலறும் அமெரிக்கா!

மும்பையில் 1993 தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சிக்கு தப்பியோடினார்.
சுமார் 17 ஆண்டுகளாக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக வாழக்கை நடத்தி வருவதாக இத்தனை ஆண்டுகளாக இந்தியா புலம்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், தாவூத்திற்கு பாகிஸ்தான் தஞ்சமளிப்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பது அமெரிக்காவுக்கு இப்போதுதான் உறைத்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதில், அமெரிக்காவுக்கு தாவூத் எந்தளவுக்கு அபாயகரமான சக்தி என்பதும், தெற்காசியாவில் தாவூத்தின் சுதந்திரமான தீவிரவாத நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
'டி-கம்பெனி (தாவூத் அண்ட் கோ)என்ற பெயரில் 5,000 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கிரிமினல் அமைப்பு பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இயங்கி வருகிறது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் கொள்கை ரீதியாக கூட்டணி வைத்துக்கொண்டு லஷ்கர்-இ-தொய்பா, அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுடனும் இவர்கள் இணைந்து இயங்கி வருகின்றனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராகிமை ஏற்கனவே அமெரிக்கா தீவிரவாதிகள் பட்டியலில் தான் வைத்துள்லது. சர்வதேச தீவிரவாதி, பயங்கரமான வெளிநாட்டு தீவிரவாதி, கள்ளக் கடத்தல்களுக்கு காரணமானவன் என பல குற்ற அந்தஸ்துகளுடன் தான் தாவூத்தை அமெரிக்கா கட்டம் கட்டிவைத்திருந்தது.
ஆனால், இவ்விஷயத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க இதுவரை எவ்வித நெருக்குதலும் தராமல் இருந்தது. ஆனால் தற்போது டெட்ராய்ட் விமான தாக்குதல் சதி திட்டத்திற்கு பிறகு தீவிரவாத விவகாரத்தில் மீண்டும் சிறப்பு கவனம் செலுத்திவரும் அமெரிக்கா தற்போது தாவூத்திற்கு தஞ்சம் அளிக்கும் நாடுகள் மீது திரும்பியுள்ளது.
இதுபோன்ற சர்வதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கத் தவறிய அமெரிக்க தற்போது, அவர்கள் அமெரிக்க நலனுக்கு எதிரான செயலில் ஈடுபடுகிறார்கள் என்றவுடன் வரிந்துகட்டிக் கொண்டு பாகிஸ்தானை சாடுகிறது.
'2001ம் ஆண்டிலேயே அமெரிக்காவால் வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு வைத்துள்ள தாவூத் அண்ட் கோ, தீவிரவாத பயிற்சி, முகாம்கள், தாக்குதல்கள், கடத்தல்கள் போன்ற பலவற்றிற்கும் நிதியுதவியை வழங்கி வருகிறது.
மும்பையில் 26/11 தாக்குதல் நடந்ததிலும் தாவூத் ஆண்ட் கோவிற்கு தொடர்பு உள்ளது. தாவூத்தின் ஆட்கள் தான் தீவிரவாதிகளுக்கு படகுகளை கொடுத்து உதவியது என்றும் தகவல்கள் உள்ளன' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாவூத்தின் பழையகால வரலாறு குறித்து குறிப்பிடும்போது, தாவூத்தின் தீவிரவாத வெறிக்கு அடிப்படைக் காரணம் என என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
'1970களில் மும்பையில் லோக்கல் தாதாவாக வலம்வந்த தாவூத், மெல்ல மெல்ல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு மிகப்பெரிய தாதாவாக 1990களில் உருவெடுத்தான்.
குறிப்பாக பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதன்பின் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களின் பின் தாவூத் மிக சீரியஸான தீவிரவாதியாகவே மாறிவிட்டான். இந்திய அரசு முஸ்லீம்களுக்கு ஆதரவாக நடக்க தவறிவிட்டதாக தாவூத் தரப்பு நினைக்கிறது.
இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகள் நடத்த தேவையான அத்தனை உதவிகளையும் வழங்குகிறான்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications