'எஸ்.ஐ-மருத்துவமனைக்கு அனுப்பியதில் தாமதம் இல்லை'

ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டரான வெற்றிவேல், நேற்று முன்தினம் ஆழ்வார்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நடுரோட்டில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலைக் கும்பல் வெட்டிக் கொன்று கொண்டிருந்த போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன், அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கார்களில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர்.
நடுச் சாலையில் நடந்த படுகொலையைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் கார்களை நிறுத்தி இறங்கி ஓடி வந்தனர். இதையடுத்து கொலைக் கும்பல் ஓடி விட்டது.
இந்த வழக்கை தற்போது ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வெற்றிவேல் சாலையில் குத்துயிரும், குலையுருமாக கிடந்த போது அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அமைச்சர்களும், அதிகாரிகளும், கலெக்டரும், போலீஸாரும் அப்படியே நின்று கொண்டிருந்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
வெற்றிவேல் துடித்தபடி சாலையில் புரண்டு வரும் காட்சியும், அவருக்கு சற்று அருகே அமைச்சர்கள் பன்னீர் செல்வம், மைதீன்கான் ஆகியோர் சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும் காட்சியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்குத் துடித்துக் கொண்டிருந்த வெற்றிவேலைக் காப்பாற்ற மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மனித நேயம் இல்லாமல் அனைவரும் நடந்து கொண்டதாகவும் கடும் புகார் எழுந்துள்ளது.
சட்டசபையில் அமைச்சர் விளக்கம்:
இந்த சர்ச்சை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக உறுப்பினர் பி.கே.சேகர் பாபு இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகமாகி விட்டது. சென்னை கொலை நகரமாக மாறுகிறது. பல்வேறு மர்மங்களை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
நெல்லை அருகே சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டார். அவர் குற்றுயிரும், குலையிருமாக கிடந்தபோது அமைச்சர்கள் அங்கு இருந்து இருக்கிறார்கள். ஆனால் உடனே ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகையில்,
உறுப்பினர் சொல்வது தவறான தகவல். நான், அமைச்சர் மைதீன்கான், மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் அங்கு வந்தோம்.
உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு 108 எண் ஆம்புலன்சை அழைத்தோம். அது தென்காசியில் இருப்பதாக சொன்னார்கள். உடனே காலதாமதம் இல்லாமல் அங்கிருந்த பாதுகாப்பு போலீஸ் வாகனத்தில் அவரை ஏற்றி ஒரு மருத்துவரையும் அனுப்பி வைத்தோம் என்றார்.
10 நிமிடமே தாமதம்- கலெக்டர்:
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில்,
சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வெட்டப்பட்டும், வெடிகுண்டு வீசப்பட்டும் காயமடைந்த நிலையில் இருந்த ஒரு நிமிடம் கழித்துத்தான் அந்த இடத்திற்கு அமைச்சர்களின் கார்கள் வந்தன.
எஸ்.ஐ., படுகாயமடைந்த நிலையில் இருந்தார். அவர் விபத்தில் காயமடையவில்லை, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் காயமடைந்து கிடந்தார். அவர் அருகே வெடிக்காத சில குண்டுகளும் கிடந்தன.
அருகில் கிடந்த குண்டுகள் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்ததால் யாரும் அருகில் போக தயங்கினர்.
நாங்கள் சென்ற போது அப்பகுதியில் லேசான புகை மண்டலமும் இருந்தது. இதனால் தான் எங்களால் அவர் அருகில் உடனே சென்று உதவ முடியவில்லை.
மேலும், புதர்களுக்குள் பதுங்கியிருந்த கொலையாளிகள், வெடிகுண்டுகளை வீசித் தாக்கலாம் என்ற தயக்கத்தாலும் உடனடியாக அருகில் போக முடியவில்லை.
மேலும், அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரில் பலர் கொலையாளிகளை விரட்டிச் சென்ற நிலையில் எஞ்சியிருந்தவர்கள் தான் உதவிக்கு வந்தனர்.
கொலையாளிகள் தாக்குதல் நடத்தி விடக் கூடாது என்பதற்காக போலீஸார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
காயமடைந்திருந்த சப் இன்ஸ்பெக்டரை காப்பாற்றுவற்காக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் போலீஸ் வாகனத்தில் சப் இன்ஸ்பெக்டரை ஏற்றி அனுப்பி வைத்தோம்.
மொத்தத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே தாமதமானது என்றார்.
நெல்லை விரைந்த கூடுதல் டிஜிபி:
இதற்கிடையே, வெற்றிவேல் கொலை தொடர்பான விசாரணை குறித்து ஆராயவும், அதை முடுக்கி விடவும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் நெல்லை விரைந்துள்ளார்.
அங்கு அவர் இதுவரை பிடிபட்டுள்ள 7 பேரிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications