கே.பி.ஜெயின் லீவு-டிஜிபியாக லத்திகா சரண் நியமனம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூலிப்படையினரால் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு மறு தினம் இந்த புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
சப் இன்ஸ்பெக்டர் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து நீண்ட விடுப்பு கோரி விண்ணப்பித்தார் கே.பி.ஜெயின். உடனடியாக அவருக்கு அனுமதி தரப்பட்டது. இதைத் தொடர்ந்து லத்திகா சரண் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட அறிவிப்பை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் மாலதி நேற்று வெளியிட்டார்.
லத்திகா சரண் தற்போது காவலர் பயிற்சி டிஜிபியாக உள்ளார்.
நீண்ட விடுப்பில் போவது குறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு கே.பி.ஜெயின் அளித்துள்ள பேட்டியில், நீண்ட விடுப்பு கோரி விண்ணப்பித்தேன். அது கிடைத்தது போகிறேன் என்றார்.
அதிருப்தியுடன் விடுப்பில் போகிறீர்களா என்று கேட்டபோது, முழு மனதுடன், விருப்பப்பட்டுத்தான் நீண்ட விடுப்பில் போகிறேன் என்றார். ஜனவரி 14ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை விடுப்பில் செல்கிறார் ஜெயின். ஏப்ரல் 30ம் தேதி அவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பெண் டிஜிபி...
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை லத்திகா சரண் பெறுகிறார். மேலும் இந்தியாவின் 2வது பெண் டிஜிபி என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கிறது.
(முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை வைத்திருப்பவர் உ.பியைச் சேர்ந்த காஞ்சன் செளத்ரி பட்டச்சார்யா. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி கடைசி வரை டிஜிபியாக பதவி உயர்த்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். டெல்லி மாநகர காவல்துறை ஆணையராக அவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி கடும் முட்டுக்கட்டை போட்டதால் அதிருப்தியுடன் போலீஸ் பணியை உதறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பு வகித்தவர் லத்திகா. அவர்தான் சென்னை மாநகரின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் முதல் பெண் கமிஷனர் என்ற பெருமையும் அவருக்கே உண்டு.
நேர்மையான அதிகாரியான லத்திகா சரண், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறைச் சேர்ந்தவர் ஆவார். பிறந்தது மூணாறு என்றாலும் படித்தது எல்லாம் சென்னையில்தான். பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முடித்த பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. உளவியல் படித்தார்.
1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். சென்னை மாநகர கமிஷனர் பதவியில் இவர் இருந்தபோதுதான் கடந்த சட்டசபைத் தேர்தல் நடந்தது. மேலும், வெள்ளை ரவி என்ற பிரபல தாதா என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்டதும் இவரது பதவிக்காலத்தில்தான்.
4 சென்னை துணை கமிஷனர்கள் மாற்றம்:
இந் நிலையில் சென்னை மாநகர துணை கமிஷனர்கள் 4 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகர் துணை கமிஷனர் சம்பத் குமார் ரயில்வே எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். ரயில்வே எஸ்.பி., பன்னீர்செல்வம் தென் சென்னை போக்குவரத்து துறைக்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளனர்.
தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த சண்முகவேல் பூக்கடை துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். பூக்கடை துணை கமிஷனர் பெரியையா தியாகராய நகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications