சத்துணவு திட்டம்-'எம்ஜிஆர் பெயர் நீக்கப்படவில்லை'
சென்னை: சத்துணவு திட்டத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயர்தான் சூட்டப்பட்டு, அந்த தலைப்பின் கீழ்தான் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு வருவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏக்கள் செங்கோட்டையன், சேகர்பாபு ஆகியோர் சத்துணவு திட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் பெயர் இந்த ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின்,
இங்கே பேசிய அதிமுக உறுப்பினர் இந்த ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அதற்கெல்லாம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளிக்கும் போது விளக்கமான பதில்கள் அவருக்கு வழங்கப்படும்.
இங்கு குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்கு மட்டும் நான் பதிலளிக்க விரும்புகிறேன். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரை சத்துணவு திட்டத்திலிருந்து நீக்கி விட்டதாக இங்கே பேசினார்கள். அது முழுக்க, முழுக்க தவறான தகவல்.
'புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம்' என்ற பெயரில்தான் இப்போதும் இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தலைப்பில்தான் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. இதை 2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்புகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
சட்டசபையில் 'சங்கர்லால்':
நேற்று சட்டசபைக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வசந்தகுமார் வித்தியாசமான கருப்பு தொப்பி அணிந்து வந்திருந்தார்.
அவரை துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி நகைச்சுவையாக, 'சங்கர்லால்' பேசுங்க என்று அவரை பேச அழைத்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
'சங்கர்லால்' என்று கல்வியாளரோடு என்னை ஒப்பிட்டதற்கு நன்றி என்று வசந்தகுமார் கூற சிரிப்பலை மேலும் அதிகமானது.
அவர் கல்வியாளர் அல்ல, துப்பறியும் நிபுணர் என்று வசந்தகுமாருக்கு சங்கர்லால் குறித்து 'பாடம் எடுத்தனர்' சில எம்எல்ஏக்கள்.












Click it and Unblock the Notifications