யுஎஸ் விசா: சென்னையில் 20% விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

விண்ணப்பங்கள் சரிவர நிரப்பப்படாத காரணத்தால் இந்த நிராகரிப்பு என தூதரகம் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அமெரிக்கா விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறையில், பிப்ரவரி 1ம்ந் தேதியில் இருந்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேர்காணலின்போது, உண்மையை சொன்னால் மட்டும் விசா கிடைக்கும் என்று அமெரிக்க துணைத்தூதர் ஆண்ட்ரூ சிம்கின் கூறினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ஆண்ட்ரூ சிம்கின் மற்றும் விசா பிரிவு அதிகாரி பிரையன் டால்டன் ஆகியோர், அமெரிக்க தூதரகத்தில் பேட்டி அளித்தார்கள். அவர்கள் கூறியதாவது:
அமெரிக்கா செல்வதற்காக உலகம் முழுவதிலும் ஒரு ஆண்டில் 80 லட்சம் பேர் விசா கோரி விண்ணப்பிக்கிறார்கள். இந்தியாவிலிருந்தும் ஏராளமானோர் மனு செய்கிறார்கள். சென்னை அலுவலகத்திலிருந்து, கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேர் அமெரிக்க செல்ல விண்ணப்பித்தார்கள்.
மனு செய்யும் 5 பேரில் ஒருவருக்கு விசா கிடைக்காமல் போயுள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 558 மனுக்களை பரிசீலிக்கிறோம். ஹைதராபாத்தில் புதிய அலுவலம் தொடங்கியபிறகு தற்போது 458 ஆகக் குறைந்துள்ளது.
விண்ணப்ப முறை மாற்றம்:
அமெரிக்கா செல்வதற்காக வழங்கப்படும் குடியேற்ற உரிமை அல்லாத பிரிவினருக்கான விசா விண்ணப்பத்தை ஆன்லைன் (இன்டர்நெட்) மூலம் நிரப்பி அனுப்பும் வழிமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் விசா விண்ணப்ப முறை, பிப்ரவரி 1ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதாவது, தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது டி.எஸ்.156 (அனைவருக்கும் கட்டாயம்) மற்றும் டி.எஸ்.157, டி.எஸ்.158 ஆகிய மனுக்களையும் நிரப்ப வேண்டியுள்ளது. நேர்காணலுக்கு போகும்போது, அவற்றின் பிரிண்ட் அவுட்களையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இனி அவற்றுக்கு பதிலாக, டி.எஸ்.160 என்ற ஒரே மனுவில் விண்ணப்பித்தாலே போதும். அத்துடன், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும்.
டி.எஸ்-160 மனுவின் பிரின்ட் அவுட்டை நேர்காணலின்போது எடுத்துச் செல்லத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, அந்த படிவத்தை பூர்த்தி செய்யும்போது தோன்றும் அத்தாட்சி பக்கத்தை (confirmation report) மட்டும் விண்ணப்பதாரர்கள் எடுத்துச் சென்றால் போதுமானது.
வரும் ஜனவரி 19ம்ந் தேதியுடன் தற்போதைய நடைமுறை முடிவடைந்துவிடுகிறது. பிப்ரவரி 1 முதல் புதிய மனுவில்தான் (டி.எஸ்-160) மனு செய்ய வேண்டும்.
ஜனவரி 19 முதல் 31 வரை நேர்காணலுக்கு வர விரும்புவோர், ஜனவரி 19க்குள் மனு (பழைய முறைப்படியே) செய்ய வேண்டும். பிப்ரவரி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய முறையானது, ஏற்கனவே 22 நாடுகளில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா செல்வதற்காக, சிலர் விசா மனுக்களில் தவறான தகவல்களை குறிப்பிடுகிறார்கள். நாங்கள் அவர்களை எளிதாக கண்டுபிடித்துவிடுவோம்.
அதனால், உண்மையான விவரங்களை மட்டும் சொல்லுங்கள், எளிதில் அமெரிக்க செல்ல விசா கொடுக்கிறோம். அமெரிக்கா செல்ல பொய் சொல்லத் தேவையில்லை. இப்போது இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிகச் சிறந்த நட்பு நாடுகள்.
சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா பயணம் மேற்கொண்டதில் உறவுகள் மேலும் பலமடைந்துள்ளது.
இதன் விளைவாக இந்தியாவில் இருந்து மாணவர்கள், வணிகர்கள் என ஏராளமானோர் அமெரிக்கா செல்கிறார்கள். நாங்கள், இவர்களை அனுப்புவதன் மூலம், அமெரிக்கா-இந்தியா ஆகிய இருநாடுகளுக்கிடையிலான நட்புப் பாலம் மேலும் வலுப்படுகிறது, விரிவடைகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications