எஸ்.ஐ. மரணம்-இரு அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்க-ஜெ.
சென்னை: நடு ரோட்டில், வெட்டப்பட்ட, வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டரைக் காப்பாற்ற முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மைதீன்கான் ஆகிய இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரு அமைச்சர்களும் ஒரு போலீஸ்காரரின் உயிரைக் காக்க முயலாமல் வேடிக்கை பார்த்த செயல் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற செயல்.
மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டு, கடுமையான காயத்துடன் உதவி கோரி கதறிக் கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டரைக் காக்க இரு அமைச்சர்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தது மிகவும் கண்டனத்துக்குரியது.
துடித்துக் கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டரை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைக்காமல், ஆம்புலன்ஸ் வரட்டும் என்று இருவரும் காத்திருந்தது வருத்தத்திற்குரியது. ஒரு உயிரைக் காக்கத் தேவையான அந்த பொன்னான நேரத்தை அவர்கள் தவற விட்டு விட்டனர்.
ஆம்புலன்ஸுக்குக் காத்திருந்ததை விட இரு அமைச்சர்களும் தங்களது காரிலோ அல்லது போலீஸ் வாகனத்திலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்டிச் செய்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அப்படிச் செய்யாமல் இரு அமைச்சர்களும் மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொண்டுள்ளனர்.
இரு அமைச்சர்களையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications