சமச்சீர் கல்வி மசோதா தாக்கல்-அதிமுக எதிர்ப்பு
சென்னை: சமச்சீர் கல்வி திட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதில் தமிழ் வழிக் கல்விக்கு இடமில்லை என்று கூறி அதிமுக ஆரம்ப நிலையிலேயே அதை எதிர்ப்பதாக தெரிவித்தது.
தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமச்சீர் கல்வித் திட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், வருகிற கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை முதல் கட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வரும்.
இதில் மொழிப் பாடங்கள் தவிர பிற பாடங்களை தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் போதிப்பதை சம்பந்தப்பட்ட பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை இருந்து வந்த பள்ளிக் கல்வி வாரியம் கலைக்கப்பட்டு பொதுக் கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவில் தமிழ் வழிக் கல்விக்கு உத்தரவாதம் இல்லை, இடமில்லை. எனவே இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம் என்று கூறி குரல் கொடுத்தனர். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக, வெளிநடப்பு:
இந் நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பதாகவும், அதை விரைவுபடுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்றும் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் துரைமுருகன், நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தேக்கத்திற்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது. நீதித்துறையை நாம் விரட்டி வேலை வாங்க முடியாது.
நீதித்துறையைப் பொறுத்தவரை ஒரு அரசின் கடமை என்பது நிதி ஒதுக்கீடு மட்டும்தான். இந்த வழக்கு தேக்கம் தொடர்பான நீதித்துறையினரிடம் பேசிய போது, நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் நீதிமன்றங்களின் அனைத்து பணியிடங்கள் பல காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டார்கள். அதை அரசு செய்து கொடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை கோர்ட்டுகளில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 94 வழக்குகள் தேங்கி உள்ளன. வழக்குகளை விரைவாக முடிக்க சென்னை ஹைகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 45ல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டது. கோர்ட்டுகளுக்கான பணியாளர்கள் 261 பேர் புதிதாக நியமனம் செய்யபட்டனர். அதுபோல புதிய நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன.
கடந்த 3ஆண்டுகளில் 155 புதிய கோர்ட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தாலும் தொடரப்படும் புதிய, புதிய வழக்குகள் காரணமாக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது என்று கூறிவிட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் மிகப் பெரிய வழக்கு, தமிழகத்தையே உலுக்கிய வழக்கு. உச்சநீதிமன்றத்தில் பல காலம் நடைபெற்றது. ஒரு நீதிபதி விசாரித்தார். 2 ஆண்டுகள் கழித்து நீதிபதி ஓய்வு பெற்று செல்லும் போது, பொது ஊழியர் ஒருவர் அரசாங்க சொத்தை வாங்குவது தவறில்லை என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு்ப் போய்விட்டார் என்றார்.
இதற்கு அதிமுக தரப்பில் அமைச்சரின் கருத்துக்கு பலத்த ஆட்சேபம் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் கூறினார்.கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டுகள் எதுவும் கூற கூடாது என்ற நிலையில் அமைச்சரின் இந்த கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று உரத்த குரலெழுப்பினார்கள்.தொடர்ந்து பேசிய துரைமுருகன், நான் எந்த வழக்கு, இதில் தொடர்புடைய கட்சி எது? அரசியல்வாதி யார்? என்று எதுவுமே சொல்லவில்லை. ஒரு பொதுவான வழக்கு என்றுதான் குறிப்பிட்டேன். அதற்காக நீங்கள் ஏன் எழுந்து ஆட்சேபிக்கிறீர்கள். அப்படியென்றால் இது உங்களுக்கு தொடர்புடைய வழக்கோ என்றார் தனது ஸ்டைலில்..
இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், அப்படியென்றால் நாங்களும் பெயர், ஊர் சொல்லாமல் உட்பொருளை வைத்து பேசலாமா? என்றார்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு, அமைச்சர் எந்த கட்சியையும், யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அவர் கூறியதும் ஆட்சேபகரமான வார்த்தை இல்லை. எனவே இதை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
அப்போது அதிமுகவினர் அனைவரும் எழுந்து நின்று உரத்த குரலில் அமைச்சர் ஒழிக, சபாநாயகர் ஒழிக என்று கோஷம் போட்டனர்.
இதையடு்த்து தனது இருக்கையிலிருந்து எழுந்த சபாநாயகர், அவைக் குறிப்பில் எது இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்று முடிவெடுப்பது நான்தான். அந்த வகையில் இதில் எந்தவித விதிமீறலும் ஆட்சேபம் இல்லை என்பதால் அவைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது. நீங்கள் அனைவரும் உட்காருகிறீர்களா? அல்லது உங்களை அவையிலிருந்து வெளியேற்றவா? என்றார்.
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி எழுந்து, இந்த அவையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒரு கருத்தை சொன்னார்.அதை நாங்கள் ஆட்சேபித்தபோது, அப்போது இங்கிருந்த முன்னாள் முதல்வர், வளர்மதி பொதுவாகத்தான் பேசினார்.யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே அது அவைக் குறிப்பில் இருக்கலாம் என்று கூறி, அது இப்போதும் பேரவை குறிப்பில் இடம் பெற்றுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் அன்பழகன், வழக்குகள் தாமதமாகிறதே அது ஏன் என்று காங்கிரஸ் உறுப்பினர் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் ஒரு பொதுவான கருத்தைத்தான் சொன்னார். யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டாக கூறவில்லை. இதில் எந்த குற்றமும் இல்லை. இதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகரும் தீர்ப்பளித்து விட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு பிரச்சனையை கிளப்புவது சட்ட மீறலும், பேரவை தலைவரின் தீர்ப்பை மீறுவதாகத் தான் அர்த்தம் என்றார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அரசுக்கும், சபாநாயகருக்கும் எதிராக கோஷம் எழுப்பியவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் சபைக்கு வந்து நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.
ஜுடிசியல் வர்ணாஸ்ரமம்'-துரைமுருகன்:
நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் பேசுகையில், புதிய கோர்ட்டு வேண்டும் என்று எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தான் கேட்டு பெறுகிறார்கள். ஆனால் அதன் திறப்பு விழாவில் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் வெளியே நிறுத்தப்படுகிறார்கள். இது வேதனையானது. இனியாவது இதுபோல் தொடராமல் மாற்றியமைக்கப்படுமா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் துரைமுருகன், உங்கள் கருத்தில் நானும் ஒன்றுபடுகிறேன். சிலை செய்யும் சிற்பிக்கு சிலையை திறந்த பின்னர் அதைத் தொட அனுமதி கிடையாது. இது வர்ணாஸ்ரமம் என்கிறார்கள். அதுபோல ஜூடிசியல் வர்ணாஸ்ரமம் இருக்கிறது என்று கூட நான் பேசியிருக்கிறேன். இதனை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். இந்த அரசு மீண்டும் மீண்டும் இதை வற்புறுத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications