மரபணு மாற்றப்பட்ட விதை விற்பனை-தடுக்க முடியாது
சென்னை: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரி, பருத்தி விதைகளின் விற்பனையைத் தடுக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), செங்கோட்டையன் (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு விவசாயத்துறை அமைச்சசர் வீரபாண்டி ஆறுமுகம் அளித்த பதில் விவரம்:
மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அமெரிக்காவின் மான்சாட்டோ நிறுவனம் வீரிய ரக மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்துள்ளது. இந்த நிறுவனத்திடம் ஒருமுறை விதைகளை வாங்கினால், தொடர்ந்து வாங்க வேண்டும்.
மான்சாட்டோ நிறுவனத்திடம் இருந்து காப்புரிமை பெற்ற நிறுவனம், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்த கடந்த 1996ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தது.
விதைகளை வாங்கி சோதனை அடிப்படையில் பயிர் செய்து பாதிப்பு வருகிறதா? என முதல்வர் பார்க்கச் சொன்னார்.
பல பயிர்களுக்கு இடையே இந்த விதைகளை விதைத்த போது, எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டது. ஆனாலும், அதை அரசு அனுமதிக்கவில்லை. பயிர்கள் பாதித்தது என்றால், வழக்குப் போடலாம். அதற்காக, விதைகள் விற்பனையைத் தடுக்க முடியாது.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசின் சார்பில் அனுமதியோ, அங்கீகாரமோ கொடுக்கவில்லை.
இந்த விதைகளால் மற்ற பயிர்கள் பாதிக்கப்படுவதாக அரசுக்கு இதுவரை புகார்கள் வரவில்லை. இந்த விதைகளை விவசாயிகள் வாங்குவதற்கு அரசு ஆதரவும் அளிக்கவில்லை.
விளைச்சல், உற்பத்தி அதிகமாக உள்ளது என்று அவர்களே வாங்குகிறார்கள்.
கத்தரியின் பல்வேறு விதைகளை கலப்பினம் செய்து மரபணு மாற்றப்பட்ட விதையை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
இந்த விதை மூலம் உற்பத்தியாகும் கத்தரியை புழு தாக்காது, சொத்தை ஏற்படாது. மூன்று ஆண்டுகள் உழைப்பில் இந்த விதையை உருவாக்கியுள்ளனர். இதை உடனடியாக விவசாயிகளுக்கு அளித்து விட முடியாது. இதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி விதைகள் அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிபுணர் குழு விதைகளைச் சோதனை செய்து இதனால் மற்ற பயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என சான்று அளித்துள்ளது என்றார் ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications