'பிரதமராகியிருந்தால் இந்தியாவையே மாற்றியிருப்பார் ஜோதிபாசு'
கொல்கத்தா: ஜோதிபாசுவை பிரதமர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதித்திருந்தால் இந்தியாவை மிகச் சிறந்த நாடாக மாற்றியிருப்பார் ஜோதிபாசு. மிகச் சிறந்த இந்தியாவை மக்களும் கண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று பாசுவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
கொல்கத்தா வந்த முலாயம் சிங் யாதவ் அங்கு கவலைக்கிடமான நிலையில் உள்ள ஜோதிபாசுவைப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜோதிபாசுவை பிரதமர் பதவியை ஏற்க அனுமதித்திருந்தால் நாட்டின் நிலை நிச்சயம் மிகப் பெரிய அளவில் மாறியிருக்கும்.
1996ம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியின் தலைவராக பதவியேற்க வருமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது தவறு.
அவர் பிரதமராக பதவியேற்றிருந்தார், ஒரு பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கியிருப்பார் ஜோதிபாசு.
ஜோதிபாசு போன்ற மாபெரும் தலைவரை கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்த சிபிஎம்மின் செயல் துரதிர்ஷ்டவசமானது.
விரைவில் ஜோதிபாசு உடல் நலம் குணமடைந்து திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்றார்.
அமர்சிங்குக்கு 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு:
இந்நிலையில், உ.பி.யின் மொராதாபாத் நகர எம்எல்ஏ சந்தீப் அகர்வால், 'அமர்சிங் ராஜினாமா செய்தால் 25 எம்எல்ஏக்கள் ஒன்றாக சேர்ந்து பதவிகளை ராஜினாமா செய்வோம்' என அறிவித்துள்ளார்.
மேலும் மாநிலம் முழுவதும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications