'டிவி'யில் முகம் வரவில்லை- சட்டசபையில் காங் எம்எல்ஏ வருத்தம்
சென்னை: 'சட்டசபையில் டிவி கேமிராக்கள் எங்கள் பக்கம் திரும்புவதே இல்லை. எங்களை கண்டுகொள்வதே இல்லை. எங்கள் குடும்பத்தினரோ, எங்கள் தொகுதியினரோ சட்டசபையில் நாங்கள் பேசுவதை பார்க்க முடிவதில்லை' என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் வருந்தினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், ஒழுங்கு பிரச்சினையின் கீழ் பேச அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் மறுத்தார். காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்சும் அவருக்கு ஆதரவாக பேச வாய்ப்பு தரும்படி கேட்டார்.
இதையடுத்து சபாநாயகர் பேச அனுமதி கொடுத்தார். அப்போது பேசிய ஞானசேகரன், 'எதிர்க்கட்சி வரிசையில் இருக்கக் கூடிய எங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை சபாநாயகருக்கு இருக்கிறது.
'டிவி' கேமிராக்கள் எங்கள் பக்கம் ஏனோ திரும்புவதே இல்லை. எங்களை கண்டுகொள்வதே இல்லை. எங்கள் குடும்பத்தினரோ, எங்கள் தொகுதியினரோ சட்டசபையில் நாங்கள் பேசுவதை பார்க்க முடிவதில்லை.
அரசு செய்திப் பிரிவு தான் படம்பிடித்து 'டிவி'க்களுக்கு அனுப்புவதாக அறிகிறோம். அமைச்சர்கள் பேசுவதை படம் பிடிப்பது போல எங்களையும் படம் பிடிக்கச் சொல்லுங்கள்.
அல்லது நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது போல முழுமையாக ஒளிபரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூச்சல் குழப்பத்தையும், சண்டையையும் மட்டுமே காட்டுகிறார்கள். நாங்கள் பேசுவதையும் காட்டி எங்களுக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள்' என்றார்.
இதற்கு பதில் அளித்த செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, 'உங்கள் பக்கம் கேமிரா திரும்புவதன் மூலம், உங்களுக்கு நீதி கிடைக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications