'அண்ணன் அமர்சிங் வழியே என்வழி'- பதவியை துறந்தார் சஞ்சய்தத்

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்குக்கு நெருக்கமாக இருந்த அமர்சிங், தனது பொதுச் செயலாளர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
தனது உடல்நிலை காரணமாக அமர்சிங் ராஜினாமா செய்ததாக கூறினாலும் கட்சியில் அவர் மீதான அதிருப்தி கடுமையாக அதிகரித்து விட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமர்சிங்கை தனது அரசியல் குருவாக கருதும் நடிகரும் சமாஜ்வாதி கட்சி நிர்வாகியுமான சஞ்சய் தத்தும் தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்றிரவு மும்பையில் அவசரமாக நிருபர்களை அழைத்து சஞ்சய்தத் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில்,
'சமாஜ்வாதி கட்சியில் குறிப்பிட்ட சில தலைவர்களால் எனது அண்ணன் அமர்சிங் மிகவும் அவமானப்பட்டுள்ளார். அவர் நடத்தப்பட்டுள்ள விதம் என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது.
லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது என்னை கட்சியின் பொதுச்செயலாளராக்கியது அமர்சிங் தான். இரண்டு பேரும் ஒரே பதவியில் இருந்து கட்சிக்கு பணியாற்றுவோம் எனக் கூறினார்.
இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவியில் அவர் இல்லாதபோது நானும் அந்த பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
சமாஜ்வாதி கட்சியில் அமர்சிங் இருக்கிற வரை நானும் இங்கேயே தான் இருப்பேன். அமர்சிங் தனது உடல்நலம் மோசமாக இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் கட்சிக்கு உழைக்கிறார்.
ஆனால் அவரைப்போய் கட்சியில் இருக்கும் சிலர் தவறாக நடத்துகிறார்களே என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications