நேரு குறித்து நான் தவறாகப் பேசவில்லை- சசி தரூர் பல்டி

வர வர சசி தரூரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் அனைத்துத் தரப்பினரின் கடும் அதிருப்திகளையும், கோபங்களையும் சம்பாதித்து வருகிறது. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர் பேசி வைப்பதும், ட்வீட்டர் மூலம் அனுப்பும் செய்திகளும் பெரும் கண்டனங்களை அவர் பால் ஈர்த்து வருகிறது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர், கட்சித் தலைவர் சோனியா முதல் சக அமைச்சர்கள் வரை அனைவருமே சசி தரூரின் பேச்சால் கடும் கடுப்புடன் உள்ளனர்.
விமானங்களில் எக்கானமி வகுப்பை அவர் மாட்டுக் கொட்டகை என்று வர்ணித்தார். பின்னர் தனது வேலைப்பளு குறித்து அலுத்துக் கொண்டார். சமீபத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சீண்டி கடுப்பாக்கி அவரது கோபத்தை சம்பாதித்தார்.
இந்த நிலையில் தற்போது நேரு தலையில் கையை வைத்து காங்கிரஸாரின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துள்ளார் தரூர்.
டெல்லியில் நடந்த சர்வதேச உறவுகளுக்கான கருத்தரங்கில் அவர் பேசுகையில், ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளை விமர்சித்துப் பேசினார். இது காங்கிரஸாரிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஆனால் தான் அப்படிப் பேசவே இல்லை. மீடியாக்கள் தவறான முறையில் செய்தி வெளியிட்டுள்ளதாக இன்று கூறியுள்ளார் தரூர்.
தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய சசி தரூர் அவர்களிடம் பேசுகையில், நான் ஜவஹர்லால் நேரு குறித்து கூறிய கருத்துக்களை மீடியாக்கள் தவறான முறையில் வெளியிட்டுள்ளன. இது சரியல்ல. திருத்த செய்தியை அவர்கள் வெளியிட வேண்டும்.
நான் பேசியது குறித்து தவறான, சரியற்ற செய்தியைக் கண்டு நான் அதிருப்தி அடைந்தேன்.
உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், அதன் தலைவர் என்ற முறையில் நான் பேசினேன். அப்போது, உலக அரங்கில் இந்தியா என்ற தலைப்பில், லண்டன் பொருளாதாரப் பள்ளி பேராசிரியர் லார்டு பிக்கு பரேக் ஆற்றிய ஒரு மணி நேர உரையின் சுருக்கத்தைத்தான் நான் தொகுத்துப் பேசினேன்.
பரேக் சொன்ன கருத்துக்களை மறுத்து நான் பேசினேனே ஒழிய நேருவைக் குறை கூறியோ, அவரது கொள்கைகளை விமர்சித்தோப் பேசவில்லை என்றார் தரூர்.












Click it and Unblock the Notifications