திருமங்கலம் பார்முலா பென்னாகரத்தில் செல்லாது - எங்களிடமும் பார்முலா இருக்கிறது: ராமதாஸ்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பென்னாகரம் தொகுதியில் பாமக வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அங்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரச்சனையை மக்களிடம் எடுத்து சொல்லியே நாங்கள் வெற்றி பெறுவோம். ஆளும் கட்சியின் திருமங்கலம் பார்முலா பென்னாகரத்தில் எடுபடாது. நாங்கள் அங்கு புதிய பார்முலாவை உருவாக்கி இருக்கிறோம்.
ஓட்டுக்கு காசு கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று நாங்கள் மக்களை கேட்டுக் கொள்வோம்.
பென்னாகரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த பெரியண்ணன் மறைந்த சில நாட்கள் கழித்து அங்கு போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஆதரவு தரக்கோரி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை.
எனவே, எதிர்க்கட்சிகளிடம் நாங்கள் பொது வேட்பாளர் பற்றி பேசவில்லை. அதே சமயம் அங்கு போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்குமாறு பத்திரிகைகள் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
அங்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. ஆளும் கட்சிக்கு அங்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தேமுதிகவை பொறுத்தவரை அந்த கட்சியிடம் தெளிவான கொள்கைகளோ, குறிக்கோள்களோ இல்லை. ரசிகர் மன்றத்தை வைத்து கட்சியை நடத்துகிறார்கள். எனவே, தேமுதிகவை ஒரு கட்சியாகவே நாங்கள் கருதவில்லை.
சமச்சீர் கல்வி முறையில் தமிழை பயிற்று மொழியாகவும், ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகவும் ஆக்கும் வகையில் அதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி தமிழக அரசு கொண்டு வராவிட்டால் அதற்காக பாமக சிறை செல்லவும் தயார்.
தமிழ்நாட்டில் மதுவிற்பனை மூலம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது ஏழை எளிய மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணம். இதையும் தமிழக அரசின் சாதனையாக ஆளும்கட்சியினர் கூறிக்கொள்ளலாம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications