பெண் எஸ்.ஐ.யைத் தாக்கித் தள்ளிய வி.சி. பிரமுகர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு அருகே பெண் சப் இன்ஸ்பெக்டரைத் தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த பெரிய கோசணம் கிராமத்தில் உள்ள செல்லியாண்டியம்மன் கோவிலில் மாவிலக்கு எடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செல்வம் என்பவர் நம்பியூர் காவல் நிலைய எஸ்.ஐ.காந்திமதி-யிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் நம்பியூர் ஒன்றிய செயலாளர் தங்கவேலு மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர், நம்பியூர் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து எஸ்.ஐ -யுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இருதரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தங்கவேலு மற்றும் மாரியப்பன் இருவரும் எஸ்.ஐ. காந்திமதியைப் பிடித்து கீழே தள்ளி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி மயக்கமடைந்தார்.
மேலும் காவல் நிலையத்தில் இருந்த எப்.ஐ.ஆர்.மற்றும் ஆவணங்களை அவர்கள் இருவரும் கிழித்து எரிந்தனர்.
மயக்கமடைந்த காந்திமதியை மற்ற போலீசார் மீட்டு, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், போலீசார் தன்னை தாக்கியதாக, தங்கவேலுவும் கோபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
தற்போது எஸ்.ஐ-யை தாக்கியதாக தங்கவேலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
