என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....:ஜெயலலிதா

சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஜெயலலிதா பங்கேற்றார். அப்போது நடந்த விவாதம்:
ஜெயலலிதா: இலவச கான்கிரீட் வீடுகள் 21 லட்சம் பேருக்கு கட்டித்தரப் போவதாக அறிவித்துள்ளீர்கள். முதல் கட்டமாக 3 லட்சம் வீடு கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ. 60 ஆயிரம் என்றாலும் இவ்வளவு வீடுகளையும் கட்ட 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த திட்டம் ஏழைகளுக்கு நல்ல திட்டம்தான். இந்த திட்டத்துக்கு எங்கிருந்து பணம் வரப்போகிறது? சொந்த பணத்தில் இருந்து செலவு செய்வார்களா?
(ஜெயலலிதா மேலும் ஒரு வார்த்தையை சொன்னார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஜெயலலிதா பேசிய அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது)
அமைச்சர் அன்பழகன்: ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு போடும்போதும், இதற்கு பணம் எங்கிருந்து வரும் என்று கேட்டீர்கள். ஆனாலும் கலைஞர் ஆட்சியில் 2 ரூபாய்க்கு மட்டுமல்ல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்கு பணம் எப்படி வருகிறதோ... அதே போல இலவச வீடு கட்டும் திட்டத்துக்கும் பணம் வரும். வீடுகளை கட்டிக் கொடுப்போம்.
ஜெயலலிதா: தமிழ்நாட்டில் தற்போது 83 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இதற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டியதுள்ளது. தற்போது கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் மாதாந்தோறும் 20 ஆயிரம் கோடி வட்டி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இதற்கு காரணம் பயன் உள்ள திட்டங்களுக்கு செலவு செய்யாமல் எந்த பயனும் இல்லாத இலவச திட்டங்களுக்கு செலவு செய்வதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
திமுகவின் தவறான கொள்கைகளால் வருவாய் இழப்பும், வரிச்சுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் பல மடங்கு அதிகரித்து விட்டது. அதிமுக ஆட்சியில் மாநில வளர்ச்சி விகிதம் 11.85 சதவீதமாக இருந்தது.
தற்போது நமது வளர்ச்சி விகிதம் 4.55 சதவீதமாக குறைந்துவிட்டது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநில வளர்ச்சி கூட பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடை கோடியில் உள்ளது.
இங்கே, நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை எத்தனை கோடி?,
21 லட்சம் இலவச வீடுகள் கட்ட பணம் எப்படி வரும்?,
தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது ஏன்?,
55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 306 ஏக்கர் நிலம் மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சொன்னதை நம்பித்தான்-கருணாநிதி:
முதல்வர் கருணாநிதி: 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக முன்பு ஆட்சி செய்த அதிமுக பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. அது உண்மை என்று நம்பி அதை நாங்கள் ஏழை- எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாக சொன்னது உண்மை.
ஜெயலலிதா: 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம் இருப்பதாக நாங்கள் சொல்லவில்லை. பட்டா மற்றும் தரிசு நிலங்களை பண்படுத்தி கொடுப்போம் என்றுதான் கூறினோம்.
முதல்வர் கருணாநிதி: 55 லட்சம் ஏக்கர் பண்படுத்தப்பட்டால் அதை பாமரர்களுக்கு கொடுக்கலாம் என்று எண்ணிதான் நாங்கள் அறிவித்தோம்.
ஜெயலலிதா: எங்களது அறிக்கையை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அந்த நிலம் அரசிடம் இருக்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் கொடுப்பதாக சொன்ன நிலத்தை எப்போது பகிர்ந்து கொடுக்கப் போகிறீர்கள்?
பரிதிஇளம் வழுதி: அரைத்த மாவை அரைக்காதே.. துவைத்த துணியை துவைக்காதோ.
அமைச்சர் அன்பழகன்: 53 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே உள்ளது என்று காட்டுங்கள். நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம்.
ஜெயலலிதா: அரசு காலி பணி இடங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ள 2 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும்.
அமைச்சர் அன்பழகன்: 2 லட்சம் காலி இடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் சொல்லப்படவில்லை. புதிதாக இளைஞர்களை நியமித்த பிறகு நிரப்பப்படாமல் உள்ள ஓரிரு இடங்களில் மட்டும் தற்காலிகமாக ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்கலாம் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா: தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு வானத்தை நோக்கி செல்கிறது. அதிமுக ஆட்சியில் நல்ல பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் தவறான கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு கடன்கள் வாங்கப்படுகின்றன. இந்த கடன்களை திருப்பி செலுத்த முடியுமா? என்ற நிலை உருவாகி உள்ளது.
தேர்தலில் ஓட்டுப்போட ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என் ஆட்சியில் 30 ரூபாய்க்கு சர்க்கரை வாங்கலாம். தற்போது 90 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. இப்படி 5 வருடத்துக்கு கணக்கிட்டால் ரூ. 3,500 சர்க்கரைக்கு மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டியது உள்ளது. மற்ற அத்தியாவசிய விலையும் பல மடங்கு உயர்ந்து இருப்பதால் அவர் வாங்கிய பணத்தை விட 5 மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டியது இருக்கிறது.
எனவே கவர்னர் உரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி எதுவும் சொல்லவில்லை. ரேஷன் கடைகளில் 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். 1 மாதத்திலேயே நிறுத்தப்பட்ட இல்லாத திட்டத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
கடைக்கே போகாத ஜெயலலிதா:
அமைச்சர் வேலு: 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி மட்டும் அல்ல பருப்பு, உளுந்து போன்ற பலப் பொருட்களை சலுகை விலையில் கொடுக்கிறோம். 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருள் கொடுக்கும் திட்டம் இப்போதும் இருக்கிறது. முன்னாள் முதல்வர் கடைக்கு செல்லாததால் இது தெரியவில்லை.
ஜெயலலிதா: ரவை, கோதுமை மாவு என்று எதை கேட்டாலும் இருப்பில் இல்லை என்றுதான் பதில் வருகிறது. அதுதான் உண்மை. தமிழ்நாட்டில் தற்போது சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. உச்சக்கட்டமாக இப்போது காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. சமீபத்தில் நெல்லை அம்பாசமுத்திரம் அருகே காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வெடிகுண்டு வீசப்பட்டு, அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் அங்கு நின்ற திமுக அமைச்சர்கள், ஆட்சி தலைவர் ஆகியோரும் (அப்போது ஜெயலலிதா ஒரு வார்த்தையை கூறினார். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
ஜெயலலிதா: யாருமே உதவி செய்யாதது மனிதாபிமானம் இல்லாத செயல்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: எதிர்க்கட்சி தலைவர் சொல்வது தவறான தகவல். இவர் நேரில் பார்த்தாரா?
(இதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட பதிலுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் ஜெயலலிதா மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை கூறினார்)
அமைச்சர் துரைமுருகன்: உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. ஒரு நிகழ்ச்சி எதிர்பாராமல் நடக்கிறது. கொலையாளிகளை போலீசார் விரட்டி செல்கிறார்கள். வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் ஏழு, எட்டு வெடிக்காமல் கிடக்கின்றன.
அங்கு வந்த சுகாதார அமைச்சரும் அமைச்சர் மைதீன்கானும் தங்கள் பாதுகாப்புக்காக வந்த போலீஸ் ஜீப்பில் காயம்பட்ட ஆய்வாளரை ஏற்றி டாக்டரையும் அனுப்பி வைக்கிறார்கள். இவ்வளவு உதவியும் செய்த பிறகு ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார். (அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம்)
(மீண்டும் ஜெயலலிதா இந்த பிரச்சனையைப் பேசினார்)
அமைச்சர் மைதீன்கான்: அங்கு காயம்பட்டுக் கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க உடனடி ஏற்பாடு செய்து என் வாகனத்தில் என் உதவியாளரை வைத்து ஏற்றி அனுப்பினேன். அவர் காலில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் எங்களுக்கு கிடைத்த சால்வை மூலம் கட்டுப்போட்டோம். மதியம் 2.50 மணி வரை அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு பாளையங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டார். மனிதாபிமானம் அடிப்படையில் நாங்கள் செய்ததை கொச்சைப்படுத்த வேண்டாம். மனசாட்சி இல்லாதவர்கள்தான் இப்படி சொல்வார்கள்.
மகாமகம் குளத்தில் 100 பேர் செத்தார்களே:
அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்: உங்கள் ஆட்சியின் போது மகாமகம் குளத்தில் 100 பேர் மூழ்கி செத்தார்களே, நீங்கள் காப்பாற்றினீர்களா?.
அமைச்சர் துரைமுருகன்: மகாமகம் குளத்தில் 100 பேர் செத்தார்கள். அப்போது இவர்கள் ஓடிப்போய் காப்பாற்றினார்களா? அதுபற்றி பதில் சொல்லத் தயாரா?
ஜெயலலிதா: நான் முதல்வராக இருந்தபோது வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக்கு தவைராக இருந்த தேவாரம் காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து நேரில் சென்று அவருக்கு ஆறுதலும் கூறினேன்.
மகாமகம் பற்றி கேட்டால் தேவாரம்:
துரைமுருகன்: வால்டர் தேவாரம் பற்றி கேட்கவில்லை. மகாமகம் குளம் பற்றி கேட்கிறோம்.
ஜெயலலிதா: ஒருவர் காயம்பட்டு உயிருக்கு துடித்து கொண்டிருக்கிறார் உயிருக்கு போராடும் அவர் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசுகிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்.
துரைமுருகன்: அவர் துடிதுடித்தை நானும் டி.வி.யில் பார்த்தேன். அமைச்சர்களுடன் சென்ற அதிகாரிகள்தான் அவரை வாகனத்தில் ஏற்றினார்கள். யாரும் போகவில்லை என்று சொல்வது அபாண்டம்.
(தொடர்ந்து இதே குற்றச்சாட்டை கூறிய ஜெயலலிதாவின் சில சர்ச்சையான கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன)
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....:
ஜெயலலிதா: அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்று கணக்கு போட்டு 21 லட்சம் வீடுகள் கட்டுவதாக சொல்லி இருக்கிறார்கள். மக்களை எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்ற ஜெயலலிதா,
''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே..'' என்ற எம்ஜிஆரின் பாடலைப் பாடினார்.
பதில் சொல்வதற்குள் வெளியேறிய ஜெ:
இவ்வாறு கூறிவிட்டு அவையில் இருந்து ஜெயலலிதா வெளியேற, கூடவே அதிமுக எம்.எல்.ஏக்களும் சென்றனர்.
அமைச்சர் அன்பழகன்: எதிர்கட்சி தலைவர் 1 மணி நேரம் பேசினார். அவருடைய கருத்துக்களை மறுத்து உண்மையான புள்ளிவிவரங்களை சொல்லலாம் என்று இருந்தேன். அதற்குள் வெளியே சென்றுவிட்டார். ஒரு நாள் அவர் நாட்டை விட்டே வெளியேறுவார் என்றார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications