பிரபாகரன் தாயாரை எனது வீட்டில் வைத்து பராமரிப்பேன்- வைகோ

மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கின்போது மதி்முக பொதுச் செயலாளர் வைகோ, தொலைபேசி மூலம் கூடியிருந்த மக்களிடையே பேசினார். அது ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது.
பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறின் பிரதிநிதிகள், இறுதிச் சடங்கில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
புளாட் தலைவர் சித்தார்த்தன் அஞ்சலி
முன்னதாக வேலுப்பிள்ளையின் உடலுக்கு புளாட் தலைவர் சித்தார்த்தன் அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளையின் உடலுக்கு சித்தார்த்தன், வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அந்த நிகழ்ச்சியின்போது திருமாவளவன் உரை நிகழ்த்தினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications