எம்ஜிஆரை கடைசிவரை மறக்க மாட்டேன்-கருணாநிதி
சென்னை: நான் திமுக தலைவர் ஆனதற்கும், முதல்வர் ஆனதற்கும் எம்ஜிஆர் ஒரு முக்கிய காரணம். அந்த நன்றிக்காக அவரை நான் கடைசிவரை மறக்க மாட்டேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர் புதிய சட்டமன்ற வளாகத்தில் நடைபெறும், அங்கு தான் பட்ஜெட்டும் தாக்கலாகும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
புதிய சட்டமன்ற வளாகம் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் நடப்பு சட்டமன்றத்தில் நடந்த கடைசிக் கூட்டத் தொடர் இன்று முடிவடைந்தது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு இறுதியாக முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார்.
அவர் கூறுகையில்,
இந்த சட்டமன்றத்தில் கடைசியாக நடைபெறும் கூட்டத்தொடர் இது. ஒரு இடத்திலிருந்து வெளியேறி புதிய இடத்தில் குடியேறும்போது கடந்த கால வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதுபோல இந்த சட்டமன்றத்தின் நிகழ்வுகளை திரும்பிப் பார்த்து நல்லவற்றை எடுத்துக்கொண்டு விரும்பத்தகாத நிகழ்வுகளை மறந்து புதிய இடத்தில் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும்.
புதிய சட்டமன்ற வளாகப் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதை அறிவீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசிவிட்டு சென்றபோது கடைசியாக எம்ஜிஆர் பாடிய ஒரு பாட்டை பாடிவிட்டு சென்றார்.
அவர் பேசியதற்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை. 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற பாட்டை எம்ஜிஆர் என்னை மனதில் வைத்துத்தான் பாடினார்.
'ஒரு தலைவன் இருக்கிறார் மயங்காதே' என்றுதான் கூறினாரே தவிர தலைவி என்று எம்ஜிஆர் கூறவில்லை. எனவே தலைவன் என்று அவர் என்னை கூறியதாகத்தான் நான் கருதுகிறேன்.
எம்ஜிஆர் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர். என்னை திமுக தலைவர் ஆக்கியதற்கும் முதல்வர் ஆக்கியதற்கும் அவர் ஒரு முக்கிய காரணம். அந்த நன்றிக்காக எம்ஜிஆரை நான் கடைசிவரை மறக்க மாட்டேன்.
அடுத்த கூட்டம் வரும் மார்ச் மாதம் சென்னை ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் நடக்கும். இந்த கோட்டையில் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடத்தில் இருந்து யாரும் நம்மை வெளியேற்றவில்லை நாமாக வெளியேறுகிறாம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications