ஜெவுக்கு 'சுடச்சுட' பதில் தந்த அமைச்சர்கள்!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha and Sasikala
சென்னை: அதிமுக ஆட்சியில் சந்தியா போக்குவரத்துக் கழகம், ஜெ.ஜெ. டிரான்ஸ்போர்ட், ஜெ.ஜெ. நெல் என்று பெயர்கள் சூட்டப்பட்டது தொடர்பாக சட்டசபையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ஜெயலலிதா அவைக்கு வந்து நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.

கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் மட்டும் கூட்டத் தொடருக்கு வந்த ஜெயலலிதா, 10 நிமி்டம் மட்டுமே அவையில் இருந்தார். அந்த நேரத்தில் அமைச்சர்களுடன் பரபரப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந் நிலையில் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தார். சசிகலா மாடத்தில் அமர்ந்து சபை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

அவை நடவடிக்கைகளில் பங்கேற்ற ஜெயலலிதா, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது நடந்த விவாதம்:

முதல்வர் பெயர் எப்படி?:

ஜெயலலிதா: ஆளுநர் உரையில் மக்களுக்கு பயன்படக்கூடிய அம்சம் எதுவும் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற விவரங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் இம்முறை குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு முதல்வரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் உழவர் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வந்தபோது அதற்கு 'முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' என்று தான் பெயர் சூட்டப்பட்டதே தவிர எனது பெயர் சூட்டப்படவில்லை.

முதல்வர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், எந்த திட்டமானாலும் அது மக்கள் பணத்தைக் கொண்டுதான் செயப்படுத்தப்படுகிறது. எனவே, முதல்வரின் பெயரை ஒரு திட்டத்திற்கு சூட்டப்படுவது முறையற்ற செயல்.

ஜெ.ஜெ. டிரான்ஸ்போர்ட் எப்படி?:

அமைச்சர் பொன்முடி: உங்கள் ஆட்சிக் காலத்தில் சந்தியா போக்குவரத்துக் கழகம், ஜெ.ஜெ. டிரான்ஸ்போர்ட், ஜெ.ஜெ. நெல் என்று பெயர் சூட்டப்பட்டதே. தயவு செய்து நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். எம்.ஜி.ஆர். திரைப்பட நகருக்கு கூட ஜெயலலிதா நகரம் என்று சூட்டப்பட்டதே?

எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் பெயர் வைக்கப்பட்டுள்ளதே? அதையும் வேண்டாம் என்று சொல்கிறீர்களா? (அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் கடும் கூச்சலிட்டனர்)

ஜெயலலிதா: அமைச்சர் பொன்முடி முற்றிலும் தவறான தகவல்களை தருகிறார். நான் முதல்வராக இருந்தபோது....
(அப்போது அமைச்சர் பெரியசாமி இடைமறித்தார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அவர் பேசினார்)

அமைச்சர் பெரியசாமி: உழவர் பாதுகாப்புத் திட்டத்தை தான் கொண்டு வந்தது போல சொல்கிறார். அதைக் கொண்டு வந்ததும் திமுக அரசு தான்.

ஜெ. அரசியலை விட்டு வெளியேற தயாரா?:

அமைச்சர் பொன்முடி: எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தவர். தவறான தகவலை இந்த அவையில் சொல்லக்கூடாது. தவறு இருந்தால் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அவரது ஆட்சியில் அவரது பெயரை சூட்டவில்லை என்கிறாரே?. இதை நாங்கள் நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேறத் தயாரா?

(அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு எழுந்து கோஷமிட, பதிலுக்கு திமுக எம்எல்ஏக்களும் எழுந்து கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது)

என் தாயார் பெயரில் போக்குவரத்து கழகம் இல்லை:

ஜெயலலிதா: அமைச்சர் பொன்முடி மீண்டும் தவறான தகவலை சொல்கிறார். 1991ம் ஆண்டு நான் முதன் முதலாக பொறுப்பேற்றதும் எம்.ஜி. ஆர். கொண்டு வந்த சத்துணவுக்கு அவரது பெயரை சூட்டினேன். நான் ஆட்சிக்கு வந்தபோது திரைப்பட கல்லூரி என்றுதான் இருந்தது. அந்தப் பெயர் மாற்றப்படவில்லை. என் தாயார் பெயரில் போக்குவரத்துக் கழகத்துக்கு பெயர் சூட்டியதாக கூறுவதும் தவறானது. இதற்கு பொன்முடி பொறுப்பு ஏற்பாரா?.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் நானே வேந்தர் என்று அறிவித்தீர்களே?.

ஜெயலலிதா: அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறுவதும் முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. அவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். தெரிந்தே உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்கிறார்கள். அவர்களது சவால்களை நான் ஏற்க வேண்டியதில்லை. அவர்கள் தவறான தகவல் சொல்வதால் அவர்கள்தான் அரசியலை விட்டு விலக வேண்டும்.

அமைச்சர் பொன்முடி: உங்கள் ஆட்சியில் உங்கள் பெயரை சூட்டியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் தயாராக உள்ளேன்.

பெங்களூர் தமிழ்நாட்டில் இருக்கிறதா?:

ஜெயலலிதா: மொத்தத்தில், இருக்கிற முதல்வர் பெயரை ஒரு திட்டத்துக்கு சூட்டுவது பொருத்தம் இல்லாதது. இங்கு பேசிய உறுப்பினர் கொடை நாட்டில் சென்று நான் தங்குவதாக குறை சொல்கிறார். கொடை நாட்டில் நான் தங்குவதில் என்ன தவறு உள்ளது?. அது தமிழ்நாட்டில்தானே இருக்கிறது?. முதல்வரும், பொன்முடியும் சென்று பெங்களூரில் போய் தங்குகிறீர்களே?. அது என்ன தமிழ்நாட்டிலா உள்ளது? (அதிமுகவினர் மேஜையைத் தட்டினர்).

அப்போ ஹைதரபாத் திராட்சைத் தோட்டம்?:

அமைச்சர் துரைமுருகன்: நீங்கள் ஆந்திராவில் திராட்சை தோட்டத்துக்கு சென்று தங்கினீர்களே?. அது என்ன தமிழ்நாட்டிலா உள்ளது (இப்போது திமுகவினர் மேஜையைத் தட்ட அதிமுக சைலண்ட்).

ஜெயலலிதா: இப்படி குறுக்கீடு செய்து கொண்டே இருந்தால் நான் எப்படி பேசுவது!?. அற்ப விஷயங்களுக்கு எல்லாம் பதில் பேசி எதிர்க்கட்சி தலைவரின் நேரத்தை வீணடிக்கிறீர்களே?.

அமைச்சர் துரைமுருகன்: வழக்கமாக எதிர்க்கட்சி தலைவர் (ஜெயலலிதா) பேசிவிட்டு உடனே சென்று விடுவார். அதனால்தான் இப்போதே பதில் சொல்கிறோம். அற்பத்தனமாக பேசியதாக சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எப்படி பேசுகிறாரோ அதே பாணியில்தான் நானும் பேசினேன். (உடனே அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சல்).

ஜெயலலிதா: எனது பேச்சுக்கு முதல்வர் பதில் தருவார். அமைச்சர்கள இப்படி அடிக்கடி இடையில் பதில் தந்தால், தங்களது தலைவரின் திறமை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் அர்த்தம்.

அமைச்சர் துரைமுருகன்: உங்கள் ஆட்சியில் நாங்கள் பேசும்போது அமைச்சர்கள் அடிக்கடி இடைமறித்தார்களே.. உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் தானா?

ஜெயலலிதா: யார் திறமையானவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும். எனக்கு துரைமுருகனின் சான்றிதழ் தேவையில்லை.

சபாநாயகர் ஆவுடையப்பன்: நீங்கள் கவர்னர் உரை மீது பேசுங்கள்.

ஜெயலலிதா: நான் கவர்னர் உரை மீதுதானே பேசுகிறேன். முதலில் அவர்களை உட்காரச் சொல்லுங்கள். இங்கே காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததாகக் கூறினார். எங்கள் ஆட்சியில்தான் முதலில் இதை அறிமுகம் செய்தோம். முதலில் 3 ஆணையாளர்களையும் நியமனம் செய்தேன்.

அதிகார மையம்:

திருட்டு வி.சி.டியை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனது ஆட்சியில் திருட்டு வி.சி.டியை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தேன். 2004ல் திருட்டு வி.சி.டியை தடுக்க சட்டத்தில் குண்டர் சட்டத்தை சேர்த்தது நான்தான். இதனால் திருட்டு வி.சி.டி. தொழில் நிறுத்தப்பட்டது. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் திருட்டு வி.சி.டி. மீண்டும் கொடிகட்டி பறக்கத் தொடங்கிவிட்டது. மதுரை, சென்னையில் உள்ள அதிகார மையம் இதை நடத்துகிறது.

என்னங்க இது ரன்னிங் கமென்டரி மாதிரி...

தமிழ்நாட்டில் திரைப்பட துறையினர் முதல்வருக்கு அடுத்த மாதம் பாராட்டு விழா நடத்துகிறார்களாம். திருட்டு வி.சி.டியை ஒழித்ததற்கு பாராட்டு விழாவாம். அப்படி பாராட்டு விழா நடத்துவதாக இருந்தால் எனது தலைமையிலான ஆட்சி எடுத்த முடிவுக்குத்தான் பாராட்டாக அமையும். வேறு எதற்கு பாராட்டு?.

(அப்போது குறுக்கிட்டுப் பேச அமைச்சர் பரிதி இளம்வழுதி எழுந்தார்)

ஜெயலலிதா: என்னங்க இது ரன்னிங் கமென்டரி மாதிரி... ஒவ்வொன்றுக்கும் எழுந்திருக்கிறார்.

உங்கள் தொழிலே அதுதான்:

அமைச்சர் பரிதி இளம்வழுதி: திருட்டு வி.சி.டிக்கு திமுகவின் அதிகார மையம்தான் காரணம் என்று பேசுகிறார். நீங்கள் அந்த தொழிலை செய்ததால் உங்கள் ஆட்சியில் அந்த பிரச்சனை இல்லை. (அதிமுகவினர் எழுந்து கடும் கூச்சலிட்டனர்)

ஜெயலலிதா: பரிதி இளம்வழுதி தரம் தாழ்ந்த பேச்சுக்களை பேசுகிறார். இதைச் சொல்ல அவருக்கு தகுதி இல்லை.

சபாநாயகர்: நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும் (இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம்)

பரிதி இளம்வழுதி:- நீங்கள்தான் தரம் தாழ்ந்து, அற்பத்தனமாக பேசுகிறீர்கள்.

ஜெயலலிதா: (பரிதியை பார்த்து) இவர் அவ்வளவுதான். இவரது பேச்சுக்கு பதில் சொல்வதே தவறு.

(அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் இருவரும் இருக்கையை விட்டு எழுந்து முன் வரிசைக்கு ஓடி வந்தனர்)

சபாநாயகர்: நீங்கள் இருவரும் உங்கள் இருக்கையில் சென்று அமருங்கள்.

(இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட, பதிலுக்கு திமுக தரப்பும் குரல் தர அவையில் அமளி நிலவியது).

ஜெயலலிதா: ஆளும் கட்சி உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியினர் புகழ்வது மட்டும் அவருக்கு பிடிக்காது போலும். தமிழ் திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்து பேசினால்தான் முதல்வருக்கு பிடிக்கும் போலும்.

அமைச்சர் அன்பழகன்: திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்தால்தான் பிடிக்கும் என கூறுவது கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+