இருந்தால் அன்னதானம்-இறந்தால் உடல்தானம்: நெப்போலியன்
திருச்சி: இருக்கும்போது அன்னதானமும், ரத்ததானமும் செய்யவேண்டும். இறந்தபின் உடல் தானமும், கண்தானமும் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என அமைச்சர் நெப்போலியன் கூறினார்.
திருச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மண்டல மாநாட்டை மத்திய இணையமைச்சர் நெப்போலியன் துவக்கி வைத்தார். மண்டல தலைவர் நசுருதீன், பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நெப்போலியன் பேசுகையில், தமிழகத்தின் பெரிய தொகுதியான வில்லிவாக்கம் சட்டசபை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்றேன். அதேநேரம் மயிலாப்பூர் தொகுதியில் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். தற்போது மீண்டும் பெரம்பலூரில் வெற்றி பெற்றுள்ளேன்.
வெற்றி, தோல்வியை சரிசமமாக பார்க்கும் பக்குவத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி இருந்தால் சந்தோஷம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் சந்தோஷம் இருந்தாலே வெற்றி தானாக வரும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அப்போது தான் எண்ணங்கள் ஆரோக்கியமாக தோன்றும். இது குடும்பத்தையும், நாட்டையும் மேம்படுத்தும்.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி நாட்டில் இரண்டு கோடியே 19 லட்சம் உடல் ஊனமுற்றோர் இருந்துள்ளனர். இதில் பார்வையற்றோர் மட்டும் ஒரு கோடியே ஆறு லட்சம் பேர். ஆனால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கண்கள் மட்டுமே நமக்கு தானமாக கிடைக்கின்றன.
எனவே, இறந்தபின்பு உடல் தானமும், கண்தானமும், உயிரோடு இருக்கும் போது ரத்ததானமும் செய்ய அனைவரும் முன்வரவேண்டும். இவை எல்லாவற்றையும் விட அன்னதானம் சிறந்தது .
நாட்டில் கிராமப்புற பெண்கள் தான் கல்வியறிவில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுக்கு கல்வியறிவு புகட்ட லயன்ஸ் சங்கங்கள் முன்வரவேண்டும்.
சமுதாயத்தில் பெண்கள் படித்தால் குடும்பம், வருங்கால சந்ததி நன்றாக இருக்கும். ஒருவருக்கு சொத்து எவ்வளவு இருந்தாலும் அது நிரந்தரமில்லை. கல்விச் செல்வம் மட்டுமே நிரந்தரமானது என்றார்.












Click it and Unblock the Notifications