Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ், தமிழ்நெறி உள்ளவரை தமிழர்களுக்கு வீழ்ச்சியே கிடையாது- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழும், தமிழ்நெறியும் உள்ளவரை தமிழர்களுக்கு வீழ்ச்சியே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சென்னை தீவுத் திடலில் தொடங்கி வைத்துப் பேசினார்.

அவரது பேச்சு:

தீவுத்திடல் நிரம்பி வழிகின்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்று இதிலே எங்களுடைய கருத்துகளை எடுத்துச்சொல்லுகின்ற கட்டத்திலே நிகழ்ச்சியின் தொடர்ச்சி அமைந்திருக்கிறது. இதைத் தொடங்கியவர்களும் தொடங்கி வைத்த நானும் எதிர்பாராத அளவுக்கு இந்த சங்கமம் நிகழ்ச்சி வெற்றி முரசு கொட்டி வருகிறது.

அதிலும், இன்றைக்கு நடைபெற்ற இந்த கலைநிகழ்ச்சி நான் வியந்து போற்றுகின்ற அளவுக்கு-பாராட்டுகின்ற அளவுக்கு அவ்வளவு அருமையாக, அரிய பல கருத்துகளை எடுத்துக்கூறுகிற நிலையில் இங்கே நடத்திக் காட்டப்பட்டு இருக்கிறது.

சங்கமம் என்பதன் நோக்கம் பிறப்பொக்கும்' என்பதை நாட்டிலே பரவச் செய்திடல் வேண்டும். சமுதாயத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதுதான்.

பிறப்பொக்கும் என்கிற இந்த வார்த்தைக் கோவை பிறப்பு ஒக்கும் என்ற இந்த இரண்டு சொற்களைக் கொண்ட இந்த வார்த்தை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகக் கோவையிலேயிருந்து எடுக்கப்பட்டது.

நாம் நடத்த விருக்கின்ற, நாம் என்று சொல்லுகிறேன் நான் என்று சொல்லவில்லை, நாம் விரைவில் நடத்த இருக்கிற செம்மொழி மாநாட்டிற்காக முதல்முதலாக குறியிடப்பட்ட அந்த வாசகம்தான் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதாகும். கடந்த 2-வது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நம்முடைய அருமை தலைவர் அண்ணா முன்னின்று நடத்திய அந்த மாநாட்டிற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது லட்சிய வாசகமாக அமைந்தது.

இப்போது அவ்வளவு சொன்னால் போதாது இன்னும் சொல்ல வேண்டும் என்ற நிலையிலேதான். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அந்த வாசகத்தை நம்முடைய சின்னத்திலே இன்றைக்கு பொதித்திருக்கிறோம். இவ்வளவு கூட சொல்ல வேண்டியதில்லை. பிறப்பொக்கும் என்று சொன்னால் போதாது என்று நம்முடைய சங்கமம் குழுவினர்-பிறப்பொக்கும் என்கின்ற அந்த வார்த்தையை மாத்திரம் வைத்து அந்த வார்த்தைகளின் வடிவமாக இந்த காட்சி அமைப்பை எல்லாம் இங்கு காட்டியிருக்கிறார்கள்.

நாம் பிரிந்து கிடக்க கூடாது. நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் நம்முடைய தமிழ் மொழியால் ஒன்று சேர வேண்டும். நாம் நமது தமிழை காப்பாற்ற வேண்டும். நம்முடைய மொழி உணர்வை தொடர்ந்து இங்கே நிலைநாட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற இத்தனை வாசகங்களும் பொருந்தியதாக சங்கமம் கலைவிழாவிலே பிறப்பொக்கும் என்ற அந்த சுருக்கமான சொற்றொடரை அமைத்து இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.

பிறப்பொக்கும் என்பது பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்றெல்லாம் நால்வகை வர்ணங்கள் பிரிக்கப்பட்டு பறையர் என்றும், பள்ளர் என்றும், புலையர் என்றும், நாவிதர் என்றும், அருந்ததியர் என்றும் முடி திருத்துவோர் என்றும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தி அவர்களுக்கு எல்லாம் இருந்த உயர்வை-சமநிலையை அகற்றி படுபாதாளத்திலே தள்ளிய பயங்கர சூழ்ச்சியிலே இருந்து தமிழர்களை மீட்க தமிழ் சமுதாயத்தை மீட்க எழுந்ததுதான் யுகப்புரட்சி போல தமிழகத்திலே பெரியார் நடத்திய புரட்சி,

சாதி, சமயத்தை ஒழித்த புரட்சி-அந்த புரட்சியை அடிப்படையாக வைத்துதான் இந்த நடன நிகழ்ச்சி, பாடல்நிகழ்ச்சி, கற்பனை நிகழ்ச்சி, நாட்டுப்புற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு என்னுடைய அருமை மகள் கவிஞர் கனிமொழி எம்.பி.யால் நம்முடைய வர்ணனை புலி நண்பர் ஜெகத் கஸ்பரால் தம்பி சுரேஷ் ராஜனுடைய முயற்சியால் மற்றுமுள்ள நடிகர்கள், கலைஞர்கள் அத்தனை பேருடைய கூட்டு முயற்சியால் இந்த அற்புதமான நிகழ்ச்சியை நாமெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த வாய்ப்பு சென்னை மாநகரத்திற்கு மாத்திரமல்ல பல நகரங்களுக்கும், பல ஊர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நான் அவர்களுடைய இந்த செயலைப் பாராட்டுகிறேன், புகழ்கிறேன், தமிழ் உள்ளளவும் தமிழர்கள் உள்ளளவும் தமிழ்நெறி உள்ளளவும் தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை, வீழ்ச்சி இல்லை என்றார் கருணாநிதி.

ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. பேசுகையில்,

சென்னை சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முதல்-அமைச்சர் கருணாநிதி ஊன்றுகோலாக விளங்குகிறார். இந்த கலைவிழா, சென்னையில் 4-வது ஆண்டாக நடக்கிறது. தமிழகத்தில் மறக்கும் நிலையில் இருந்த பல கிராமிய கலைகளை உயிர்ப்பித்து அந்த கலையில் ஆர்வம் உள்ளவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியாக இந்த கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

சரித்திரங்களை வென்றவர்கள், வெற்றி மகுடம் சூடியவர்கள் மட்டும் மக்களுக்கு தெரிந்தால் போதாது. சாமானிய மக்களிடம் வாழ்ந்து வரும் நாட்டுப்புற கலைகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே இந்த கலைவிழாவின் நோக்கம் ஆகும் என்றார்.

முன்னதாக தொடக்க நிகழ்ச்சி 7 பேர் கொண்ட பொய்க்கால் குதிரை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் பல கலைஞர்கள் மேளதாளம் இசைத்தனர். ஒரு குழுவினர் பாட்டும் பாடினார்கள். அதையடுத்து, கலைஞர்களின் தப்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. பின்னர் முரசு கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பிறப்பொக்கும் நிகழ்ச்சியில் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. பின்னர் காளியாட்டம் நடந்தது. அதன்பின்னர் கூத்து, கரகாட்டம் ஆகியன நடைபெற்றன. இறுதியில், யாவரும் ஓர் குலம், மனிதரில் வேற்றுமை இல்லை என்ற அளவில் நவீன கொற்றவையாக நடிகை ஷோபனா தோன்றினார்.

செம்மொழிக்கு ஏற்றமே எம் தமிழருக்கு ஏற்றமே சாதியற்ற தமிழ் நாங்கள் என்று சந்தம் பாடுவோம் என்ற பாடலுடன் கலைநிகழ்ச்சி முடிவடைந்தது.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ.ராசா, பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

16ம் தேதி வரை...

இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை, 17 இடங்களில் மொத்தம் 4 ஆயிரம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, தியாகராயநகர் நடேசன் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, போகன் வில்லா அண்ணாநகர், வளசரவாக்கம் பெரியார் விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலை நேரங்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா, ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா, அசோக்நகர் பூங்கா, திருவொற்றிiர் விம்கோ நகர் மாநகராட்சி திடல், பாலவாக்கம் பல்கலைநகர் திடல், ராயபுரம் அண்ணா பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி அண்ணா அரங்கம் ஆகிய இடங்களில் மாலை நேரங்களில் கலைவிழாக்கள் நடைபெறுகின்றன.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மதியம் ஒரு மணியளவில் 11, 12 தேதிகளில் ராக் பேண்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இது தவிர, 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பல்லாவரம் கன்டோன்மென்ட் பள்ளி வளாகம், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் அரங்கு, திரு.வி.க.நகர் மாநகராட்சி பள்ளி வளாகம், மெரினா லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கு ஆகிய இடங்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டு தியாகராயநகர் வெங்கட் நாராயணா சாலையில் விடிய, விடிய இசை, நடனம் போன்ற கொண்டாட்டம் நடந்ததைப் போல இந்த ஆண்டு அண்ணாநகர் பகுதியிலும் நடைபெறும். தியாகராயநகர் திருவிழா 13-ந் தேதி மாலை 7 மணி முதல் இரவு 2 மணிவரை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு போலவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் வேணு பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி, மதுரை ஜிகர்தண்டா போன்ற தல உணவு வகைகளும் சங்கமம் விழாவில் கிடைக்கும்.

இந்த ஆண்டு பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் தவிர மேற்கத்திய இசைக்குழுவினரும் பங்கேற்று தமிழில் இசைக்கின்றார்கள். உலக அமைதி' என்ற பொருளில் இசை குழுக்களுக்கு இடையேயான போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16-ந் தேதி காணும் பொங்கல் அன்று, பிரமாண்டமான வாண வேடிக்கையுடன் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமம் விழா நிறைவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+