ஜன. 15ல் 'அக்னி வளையம்', காணத் தவறாதீர்கள்!

தமிழகத்தின் தென் பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, நாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவின் சில பகுதிகளிலும் இதை தெளிவாகவும், முழுமையாகவும் காண முடியும்.
குறிப்பாக தனுஷ்கோடியில் இதை மிகச் சிறப்பாக காண முடியும். இதுதவிர திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை காண முடியும்.
கடந்த 45 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் முதலாவது கங்கண சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இதர பகுதிகளில் இதை பகுதி சூரிய கிரகணமாக காணலாம்.
தத்தமது பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதே கிரகணம் எனப்படுகிறது.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் மத்தியப் பகுதியை சந்திரன் மறைக்கும். இதனால் பூமியின் மீது சந்திரனின் நிழல் படிகிறது. அந்தப் பகுதியில் நாம் சூரியனைப் பார்க்க முடியாது. இது சூரிய கிரகணமாகும்.
இதுவே சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனில் விழும். இது சந்திரகிரகணம்.
முழு சூரியகிரகணத்தின்போது, சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்து விடும். அதேசமயம், கங்கண சூரியகிரகணம் என்பது, சூரியனை முழுமையாக சந்திரன் மறைக்காது. மாறாக, சந்திரனின் விளிம்புகளைத் தாண்டி சூரியனின் ஒளிக்கதிர்கள் காணப்படும். இதனால் அக்னி வளையம் போல அழகுற காட்சி தரும் சூரியன்.
கடைசியாக இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம், 1965ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இந்தியாவில் தெரிந்தது. அடுத்த கங்கண சூரியகிரகணம் 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நிகழவுள்ளது.
வருகிற 15ம் தேதியன்று பிற்பகல் 1.17 முதல் 1.25 வரை கங்கண சூரியகிரகணத்தை தமிழகத்தில் காணலாம். தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் இதை மிகத் தெளிவாக காண முடியும். காரணம் இந்தப் பகுதிக்கு அருகில்தான் கிரகணத்தின் மையப் பகுதி வருகிறது என்று எம்.பி. பிர்லா கோளரங்க இயக்குநர் தேபி பிரசாத் துவாரி கூறியுள்ளார்.
கங்கண சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. அது பார்வையைப் பாதித்து விடும். மாறாக, உரிய பாதுகாப்புடன் கண்டு இந்த இயற்கை நிகழ்வை ரசிக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications