இயற்கையை காப்பதும் அறிவியலே-அண்ணாதுரை
திருச்செங்கோடு: சந்திரனுக்கு செல்வது, மருந்துகள் கண்டுபிடிப்பது மட்டும் அறிவியல் அல்ல. இயற்கை வழங்கியதை பாதுகாப்பதும் அறிவியல் தான் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். என்ஜினியரிங் கல்லூரியில் மின்னியல் அறிவியலின் தற்போதைய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
அப்போது, மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் அனைத்து துறைகளிலும் நல்ல வாய்ப்பும், எதிர்காலமும் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிடித்தது கிடைக்கா விட்டால் கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் தொடர்ந்து உழைத்தாலே முன்னேற்றம் கிடைக்கும்.
சந்திரனுக்கு செல்வது, மருந்துகள் கண்டுபிடிப்பது மட்டும் அறிவியல் அல்ல. இயற்கை வழங்கியதை பாதுகாத்து கொள்வதும் அறிவியல் தான்.
விவசாயம் ஒழுங்காக நடந்தால் தான் உலகம் செழிக்கும். விவசாயத்தை ஊக்குவித்தால் விவசாயம் பெருகும்.
இயற்கை வேளாண் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்.
அதே வேளையில், விவசாயிகள் விளைவிக்கின்ற உணவுப் பொருட்கள் துளிகூட சேதாரமில்லாமல் அனைத்தும் பயன்படுத்த தேவையான தொழில்நுட்ப அறிவு பெறவேண்டும்.
கேரளாவில் இஸ்ரோ நடத்தும் கல்லூரியில் 300 மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு குறித்து கல்வி கற்பிக்கப்படுகிறது. விமான பயணத்தைப் போன்று விண்வெளிப் பயணமும் எளிதாகிவிடும்.
விண்வெளிக்கு மனிதர்கள் சுற்றுலா செல்வது போல சுற்றிபார்க்க செல்லும் காலம் வரலாம். இதன் எதிரொலியாக, இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருகின்றது.
முன்பு, நாம், வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்தோம், தற்போது அதே கார்களை தயார் செய்து ஏற்றுமதி செய்கின்றோம். அது போன்று அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் பெறும் என்றார்.
கருத்தரங்கில், மாணவ, மாணவியர் 195 ஆய்வுகட்டுரைகள் சமர்பித்தனர். பலநாடுகளை சேர்ந்த மின்னியல், மின்னணுவியல், மின்னணு தகவல்தொடர்பியல் துறை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆராயச்சித் துறை மாணவ, மாணவியர் பங்கேற்று 195 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications