கொல்லப்பட்ட எஸ்.ஐ. மனைவிக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை
புளியங்குடி: படுகொலை செய்யப்பட்ட ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேலின் மனைவிக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்கப்படவுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ வெற்றிவேல் கடந்த 7ம் தேதி அம்பை சென்றுவிட்டு திரும்பும் போது ஆள்மாறாட்டத்தால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து புளியங்குடி அருகே முள்ளிகுளத்தில் உள்ள மறைந்த எஸ்ஐ வீட்டுக்கு நேற்று மாலை கலெக்டர் ஜெயராமன், எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.
வெற்றிவேல் குடும்பத்தில் யாராவது ஒருவர் அரசு பணி ஏற்று கொள்ள கலெக்டர் வலியுறுத்தினார். மனைவி பிரேமா குறைந்த கல்வி தகுதி உள்ள நிலையிலும், உடல் நிலை பாதிப்பாலும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரது உடல் நிலை கருதி உள்ளூரில் உள்ள சத்துணவு அமைப்பாளராக உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
மேலும், அத்துடன் எஸ்பி ஆஸ்ரா கர்க், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரி்ன் ஒரு நாள் சம்பளத்தை குடும்ப உதவி நிதியாக கொடுப்பதாக தெரிவித்தார்.
சபாநாயகரை மறித்த பெண்கள்
முன்னதாக வெற்றிவேல் குடும்பத்தினருக்கு சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் மைதீன்கான் ஆறுதல் கூறினர்.
வெற்றிவேல் படத்துககு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது மனைவி பிரேமா, மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர்கள் காரில் ஏறும்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து அமைச்சரை அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் கோர்ட்டில் சரணடைய திட்டம்:
இந் நிலையில் எஸ்ஐ வெற்றிவேல் கொலை வழக்கில் தலைமறைவான கொலையாளிகள் இன்று கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய கொலையாளிகளான கண்ணன், முருகன் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தனிப்படை போலீசார் கேரளா, சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு சென்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தலைமறைவான குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக முக்கிய கோர்ட்டுகளின் முன்பு தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர்.
கோர்ட்டில் சரண் அடைவதற்கு முன்பாகவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications