தமிழகம்: உணவு மானிய செலவு ரூ.4,000 கோடி ஆனது

தமிழக சட்டசபையில் 2009-10ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2009-2010ம் ஆண்டுக்கான இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.4078.62 கோடி அளவிலான நிதியை ஒதுக்குவதற்கு வகை செய்கின்றன. இதில் ரூ.3,395 கோடி வருவாய் கணக்கிலும் எஞ்சிய தொகையான ரூ.683.62 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
நிஷா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதற்கு கூடுதலாக ரூ.106.48 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, மற்றும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிக மானிய விலையில் வழங்குவதால் உணவு மானிய செலவு ரூ.4,000 கோடியாக அதிகரிக்கும். இதற்காக கூடுதலாக ரூ.1200 கோடி அரசுக்கு தேவைப்படுகிறது.
இத்தொகை துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய ரூ.250 கோடி அனுமதிக்க உத்தேசித்துள்ளது.
உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்காக காப்பீட்டுத் தொகையை செலுத்த அரசு கூடுதலாக ரூ.317.30 கோடி அனுமதித்துள்ளது.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டி 5வது கட்டமாக வாங்க அரசுக்கு கூடுதலாக ரூ.250 கோடி தேவைப்படுகிறது. இதுவும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
நபார்டு வங்கிக்கடன் உதவியுடன் ரூ.113.56 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிகளில் உள்ள விலைகளை மேம்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் ரூ.1 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்துக்கு தேவையான எஞ்சிய தொகை மானியத்தில் ஏற்படும் தேக்கத்தில் இருந்து மறுநிதி ஒதுக்குதல் மூலம் செலவு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நிலையான வீடுகளை கட்டவும் அரசு ரூ.100 கோடி அனுமதித்துள்ளது. இதில் ரூ.37.33 கோடி துணை மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறு நிதி ஒதுக்குதல் மூலம் செலவு செய்யப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.1.52 கோடியில் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சமாக உயர்த்தியதால் அரசு கூடுதலாக ரூ.47 கோடி அனுமதித்துள்ளது.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியங்களுக்காக பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக அரசு ரூ.115 கோடி அனுமதித்துள்ளது. இதுவும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் பதவிக்காலம் நீட்டிப்பு:
இந் நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் பெரியகருப்பனுக்கு பதிலாக செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி இன்று அறிமுகம் செய்தார்.
அதில், சமய நிறுவனங்களின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஓராண்டு கால அளவானது மிகவும் குறைவு என கருதப்படுகிறது. அவர்களின் பதவிக்காலத்தை உயர்த்த வேண்டும் என்றும் பரவலாக கருதப்படுகிறது.
இதற்கு ஏற்ப அறங்காவலர்களின் பதவிக் காலத்தை ஒரு ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளுக்கு உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications