கள் இறக்கும் போராட்டம்- 21ம் தேதி முதல் தீவிரமடைகிறது
சென்னை: கள் இறக்கும் போராட்டத்தை 21ம் தேதி முதல் தீவிரப்படுத்த தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானித்துள்ளது.
கள் இறக்க அனுமதி கோரி தமிழ்நாடு கள் இயக்கம் பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் சென்னையில் நடந்தது.
இதில், கள் உணவின் ஒரு பகுதி என்பது இந்திய அரசியல் சட்டம். எனவே சுவை தரும் கள்ளை சத்துணவில் சேர்க்க வேண்டும். கள் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
தரமில்லாத மதுபானங்கள் டாஸ்மாக் மூலமாக விற்பனை செய்யப்படும்போது, கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை தமிழக அரசு உதாசீனப்படுத்தி வருகிறது. இந்த போக்கை தொடர்ந்து கடைபிடித்தால் ஜனவரி 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
மேலும் உள்நாட்டிலும், உலக அளவிலும் கள்ளை சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
டாஸ்மாக் மதுக்களை விட கள் மோசமானது என நிரூபித்தால், இந்த கோரிக்கையை கைவிட கள் இயக்கம் தயாராக உள்ளது.
ரயில்வே துறைக்கு தனியான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது போல வேளாண்மைக்கும் தனியான நிதி நிலை அறிக்கையை மத்திய மாநில அரசுகள் தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும்.
தேசிய வேளாண் விளை பொருள் விலை நிர்ணயக்குழு பரிந்துரையை ஏற்று விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட பயிர் மற்றும் மலட்டு விதை தொழில் நுட்ப அறிமுகத்தை அரசு தடை செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications