பாஜக இளைஞரணி தலைவராகிறார் வருண்காந்தி

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பீலிபட் தொகுதியில் போட்டியிட்ட வருண்காந்தி முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
ஆனால், தனது பேச்சு மூலம் அவருக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு அதிக ஆதரவு உள்ளதாக அந்த அமைப்பு நினைக்கிறது.
இந்த இளம் தலைமுறையினரை வசீகரிக்கும் வகையில் பாஜகவில் சரியான தலைவர்கள் இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்த வெற்றிடத்தை வருண் காந்தியை வைத்து நிரப்பலாம் என பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் யோசனை தெரிவித்துள்ளது.
பாஜக இறங்குமுகத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த மாதம் சுல்தான்பூரில் வருண்காந்தி பங்கேற்ற கூட்டத்தில் மாபெரும் கூட்டம் கூடியது. இதையே உதாரணமாகக் காட்டும் ஆர்எஸ்எஸ் சங் பரிவாரில் மாபெரும் சக்தியாக வருண் காந்தி உருவெடுத்து வருவதாக நம்புகிறது.
அவருக்கு இளைஞரணி தலைவர் பதவியை கொடுத்தால் இன்னும் பெரிய சக்தியாக வருவார் என்று கூறி அவருக்காக ஆர்.எஸ்.எஸ் லாபி செய்து வருகிறது.
ஆர்எஸ்எஸ்சால் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் கட்காரியும் இந்தக் கருத்தை ஆதரித்து வருகிறார்.
இதனால், காங்கிரசின் ராகுல்காந்தி அஸ்திரத்தை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த சில மாதங்களில் வருண் காந்தியை கட்சியின் இளைஞரணித் தலைவராக முடிசூட்டி பாஜக களமிறக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications